என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய-கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    அதே நேரம் இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 24-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
    • ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

    * 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

    * 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"

    * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    * நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

    * தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    என்று தெரிவித்தார். 

    • 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாக குறைப்பு.
    • 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், ஆவின் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
    • 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோஷமிட்டனர்.

    இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகளை எடுத்துச் சென்று உபயமாக வழங்குவது நடைமுறையில் உள்ளது.

    அந்த வகையில் இன்று 21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை உபய உற்சவம் சென்னை பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் நடந்தது.

    உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பதி குடை ஊர்வலம் தொடங்கியது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ். சோம சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.



    சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.

    திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்று பக்தி கோஷமிட்டனர்.

    இதையடுத்து பைராகி மடம் வழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. இதன் காரணமாக இன்று காலை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து வேறு வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பதி திருக்குடைகள் இன்று பிற்பகல் கவுனி தாண்டுகிறது. இதனால் வடசென்னையில் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருக்குடைகள் கவுனி தாண்டிய பிறகு சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது.

    24-ந்தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

    5 நாட்கள் பயணம் செய்யும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த திருக்குடை ஊர்வலம் தென் இந்தியாவின் மிக பிரமாண்டமான திருக்குடை ஊர்வலமாக மாறி உள்ளது.

    • காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி வெளியாக உள்ளது.
    • இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர்1' படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை.
    • மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும்.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது.

    மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக பல செய்திகள் வந்துள்ளன.

    முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோ கால் வேறு. பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனத்துடனும் விஜய் இருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்குத் தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' பட பிரச்சனைக்காக 3 நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல.

    மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது. கவர்னர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம்.

    குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    பா.ம.க. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து சட்டமன்றம் கூடும்போது பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்டி படத்தை அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். .
    • இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.

    இப்படத்தை அறுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில், பல்டி படத்தின் டிரெய்லர் வெளியானது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது. 

    • இச்செயலி பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை ஒன் செயலி மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

    இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    • இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
    • நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.

    கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.

    • ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
    • ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டிலிருந்து ரூ.1.5 லட்சமே கொடுத்துள்ளனர். இதனால் ரேஷ்மாவின் மாமியார் ஆத்திரத்தில் இருந்து வந்தார். ரேஷ்மாவை அவர் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

    ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.

    இந்த நிலையில் பாம்பு ரேஷ்மாவை கடித்தது. வலியால் அலறிதுடிப்பதை அவரது மாமியார் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்துள்ளார். ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கை ரிஸ்வானாவை அழைத்து தனக்கு நடந்த கொடுமையை சொன்னார்.

    உடனே வீட்டுக்கு வந்து அக்காவின் நிலைமையை பார்த்த ரிஸ்வானா பதறிப்போனார். கணவன் வீட்டாரிடம் சண்டைப் போட்ட ரிஸ்வானா, தனது அக்காவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அக்காவின் கணவன் வீட்டாரை தண்டிக்க எண்ணிய ரிஸ்வானா போலீசில் புகார் அளித்தார். கணவன் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள்.

    காப்பு அணியும் பக்தர்கள், கோவிலில் இருந்து காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று தங்களது ஊர்களில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் வழங்குவார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும்,

    6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
    • புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன.

    மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உரிமம் கட்டணத்தை கடந்த 2015-க்கு பிறகு 10 ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உரிமம் கட்டணம் உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் மது உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல். மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் லிட்டர் மது உற்பத்திக்கும் ரூ.2 லட்சம் உரிமம் தொகை செலுத்த வேண்டும்.

    எப்.எல். 1 என்ற மொத்த மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், எப்.எல். 2 சில்லரை மதுபான கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வகை உரிமம் கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது

    இதுபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கலால் வரியும் 2018-க்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. பீர் ஒரு லிட்டருக்கு ரூ. 3.50 இருந்து ரூ.5 ஆகவும், மதுபானங்கள் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வரி 2001-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஏற்றுமதியாகும் பீர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 பைசாவில் இருந்து ரூ. 5 ஆகவும், மதுபானங்களுக்கு ரூ. 1-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது.

    புத்தாண்டு காலங்களில் மதுபானங்களை விற்க சிறப்பு அனுமதி பெற கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசிதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.1850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உரிமக்கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்வு மூலம் கூடுதலாக ரூ.100 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×