என் மலர்
வழிபாடு

21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று தொடங்கியது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
- 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோஷமிட்டனர்.
இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகளை எடுத்துச் சென்று உபயமாக வழங்குவது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் இன்று 21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை உபய உற்சவம் சென்னை பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் நடந்தது.
உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பதி குடை ஊர்வலம் தொடங்கியது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ். சோம சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.
சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்று பக்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து பைராகி மடம் வழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. இதன் காரணமாக இன்று காலை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து வேறு வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
திருப்பதி திருக்குடைகள் இன்று பிற்பகல் கவுனி தாண்டுகிறது. இதனால் வடசென்னையில் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருக்குடைகள் கவுனி தாண்டிய பிறகு சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது.
24-ந்தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
5 நாட்கள் பயணம் செய்யும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த திருக்குடை ஊர்வலம் தென் இந்தியாவின் மிக பிரமாண்டமான திருக்குடை ஊர்வலமாக மாறி உள்ளது.






