என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான உள்ளன.
- மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் மழை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், "மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
- அவரது கணவரும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கர்நாடகாவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் பரிந்துரையால் அவரது கணவர் லோஹிதாஷ்வாவும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ரேகா மற்றும் அவரது கணவருக்கும் இது 2 அவனது திருமணமாகும். ரேகாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுங்கடகட்டே பேருந்து நிலையம் அருகே ரேகாவும் அவரது மூத்த மகளும் சாலையை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த லோஹிதாஷ்வாவுக்கும் ரேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லோஹிதாஷ்வா தான் மறைந்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை 11 முறை கொடூரமாக குத்தி கொன்றார். இதனை நேரில் பார்த்த மூத்த மகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன
- புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று விக்டோரியா பப்ளிக் ஹால்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும்- மாநகராட்சி கட்டிடத்துக்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
1882-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், சென்னைக்கு பொதுவாக ஒரு அரங்கு கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 1890-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் ரூ.16,423 செலவில், சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 57 கிரவுண்ட் பரப்பளவில் விக்டோரியா பொது அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த ஆண்டு இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றிருந்தது. அதற்கான பொன் விழாவை ஆங்கிலேயர் அரசு கொண்டாடியது. இந்த விழா தொடங்கும் போது, இந்த கட்டடப் பணிகளும் நிறைவடைந்திருந்ததால், இந்த கட்டடத்திற்கு 'விக்டோரியா பப்ளிக் ஹால்' என்று ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் சென்னை மாநகரத்தின் கலையரங்கமாகவும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடமாகவும் மாறியது விக்டோரியா ஹால். 1893 -ம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் முதல் கூட்டம் விக்டோரியா அரங்கத்தில் தான் கூட்டப்பட்டது. 1897 -ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு பொதுக்கூட்டம் நடத்தி சொற்பொழிவாற்றியதும் உண்டு.
திராவிட கட்சிக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சி முதன்முதலில் தனது பொதுக்கூட்டத்தை நடத்தியது விக்டோரியா ஹாலில் தான்.
மூன்று தளங்கள் கொண்ட இந்த விக்டோரியா அரங்கில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கீழ்த்தளத்தில் மியூசியமும், நூலகமும் இருந்தன. முதல் தளத்தில் நாடகங்களும் பல கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி, கலைகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விக்டோரியா அரங்கம் கட்டப்பட்டதாகவும், சென்னையில் முதன் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இவ்வளவு பெருமைகளையும் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தை, சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2023-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
தற்போது வரை, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, மரத்தளம் மற்றும் மரப்படிகட்டுகள் சீரமைப்பு, கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய பகுதிகள் சீரமைப்பு, கட்டடத்தின் மையப் பகுதியில் உள்ள கலை அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவது போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டடம் முழுவதும் காண்போரை கவரும் வகையில், முகப்பு விளக்குகள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முக்கியஸ்தர்களின் நிர்வாக இடமாகவும், கலாச்சார இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விக்டோரியா ஹாலில் மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
அதே போல், கட்டடத்தின் சுவர்களை சீரமைப்பது, சுண்ணாம்புப் பூச்சு வேலை, மரத்திலான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, முதல் தளத்திலிருந்து மேல் தளங்களுக்கு செல்ல நவீன முறையில் "கண்ணாடி லிப்ட்" அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது கட்டடத்திற்கு வண்ணம் பூசுதல், ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட சில வேலைகள் மட்டுமே உள்ளன. மேலும், கட்டிடத்தின் வெளிப் பகுதியில் பசுமையான புல் தரைகள், கட்டடத்தைச் சுற்றியும் சிமெண்டில் ஆன இன்டர் லாக்கிங் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன"
புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது. அதனால் விக்டோரியா ஹாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அடுத்த மாதம் திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50% குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறினார்
- இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50%க்கும் மேல் குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறியது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் 1 ரூபாய் பொருளின் விலை 40-45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருளின் விலை 45 ஆகவும் இருக்கும். இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ரவி கிஷன் பேசிய இந்த இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "ரவி கிஷனுக்கு நிதியமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்தது வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்குமார்.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ள போகிறது என்று அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆசிய லீ மான்ஸ் தொடரில் விரேஜ் அணியுடன் இணைந்து அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்கிறது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
- அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.
இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
- பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லை:
அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.
வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.
ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது.
- இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பிளே ஸ்டேஷன் 5 (PS5) மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த குறுகிய கால சலுகை கன்சோலின் டிஜிட்டல் மற்றும் Physical Edition மாடல்களின் விலையை ரூ.5,000 குறைக்கிறது.
அசத்தலான சலுகைகளை வழங்கும் சோனியின் பண்டிகை சிறப்பு விற்பனை நேற்று (திங்கட்கிழமை) அமேசான், பிளிப்கார்ட், இதர ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனை மையங்களில் தொடங்கியது.
ரூ. 5,000 தள்ளுபடி:
பிளேஸ்டேஷன் சாதனத்தின் தாய் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்டிகை கால விற்பனையை அறிவித்தது. இந்த சலுகை: PS5 Physical Edition (CFI-2008A01X) மற்றும் PS5 Digital Model (CFI-2008B01X)- என இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 மாடல்களுக்கு பொருந்தும். அதன்படி இரண்டு கன்சோல்களும் ரூ. 5,000 தள்ளுபடியைப் பெறுகின்றன.
சலுகையின் கீழ் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது. இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.54,990க்கு விற்பனை செய்யப்படும் கன்சோலின் Physical Edition ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை கால சிறப்பு விற்பனை அக்டோபர் 19ஆம் தேதி அல்லது ஸ்டாக் தீரும் வரை அமேசான், பிளிப்கார்ட், பிளிங்கிட், ஜெப்டோ, க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் மற்றும் நாட்டில் உள்ள பிற அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டேஷன் சில்லறை விற்பனை ஸ்டோர்களில் நடைபெறும்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம், சோனி நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் மாடல் PS5 கன்சோலின் விலையை ரூ. 5,000 உயர்த்தியது. இதனால் கன்சோலின் விலை ரூ. 44,990இல் இருந்து ரூ. 49,990 ஆக உயர்ந்தது.
- நேற்று இரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னை:
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற நிலையை கடந்தது. அதன் பின்னரும் தங்கம் விலைக்கு ஓய்வு என்பதே இல்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
கடந்த 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும், கடந்த 16-ந்தேதி ஒருசவரன் ரூ.82 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தையும் தாண்டியது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்தபடியே பயணிக்கிறது. இப்படியான தங்கம் விலையில் நேற்று அதிரடி உயர்வு இருந்தது.
நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், மாலையில் சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையான தங்கம், நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.
கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.775-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 200-ம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440
21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-09-2025- ஒரு கிராம் ரூ.150
22-09-2025- ஒரு கிராம் ரூ.148
21-09-2025- ஒரு கிராம் ரூ.145
20-09-2025- ஒரு கிராம் ரூ.145
19-09-2025- ஒரு கிராம் ரூ.143
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பயறு சுண்டல்:
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
* பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
* வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
* வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாதம்:
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்
வேர்க்கடலை - ½ கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ½

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.
ரவை கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை
சர்க்கரை அல்லது பனை வெல்லம்
தண்ணீர் அல்லது பால்
ஏலக்காய் தூள்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.
* அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
* ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...






