என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்குமார்.
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ள போகிறது என்று அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆசிய லீ மான்ஸ் தொடரில் விரேஜ் அணியுடன் இணைந்து அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்கிறது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது.

    பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
    • பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்லை:

    அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

    காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.

    வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.

    தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.

    ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    • PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது.
    • இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    சோனி நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பிளே ஸ்டேஷன் 5 (PS5) மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த குறுகிய கால சலுகை கன்சோலின் டிஜிட்டல் மற்றும் Physical Edition மாடல்களின் விலையை ரூ.5,000 குறைக்கிறது.

    அசத்தலான சலுகைகளை வழங்கும் சோனியின் பண்டிகை சிறப்பு விற்பனை நேற்று (திங்கட்கிழமை) அமேசான், பிளிப்கார்ட், இதர ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனை மையங்களில் தொடங்கியது.

    ரூ. 5,000 தள்ளுபடி:

    பிளேஸ்டேஷன் சாதனத்தின் தாய் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்டிகை கால விற்பனையை அறிவித்தது. இந்த சலுகை: PS5 Physical Edition (CFI-2008A01X) மற்றும் PS5 Digital Model (CFI-2008B01X)- என இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 மாடல்களுக்கு பொருந்தும். அதன்படி இரண்டு கன்சோல்களும் ரூ. 5,000 தள்ளுபடியைப் பெறுகின்றன.

    சலுகையின் கீழ் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது. இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.54,990க்கு விற்பனை செய்யப்படும் கன்சோலின் Physical Edition ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பண்டிகை கால சிறப்பு விற்பனை அக்டோபர் 19ஆம் தேதி அல்லது ஸ்டாக் தீரும் வரை அமேசான், பிளிப்கார்ட், பிளிங்கிட், ஜெப்டோ, க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் மற்றும் நாட்டில் உள்ள பிற அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டேஷன் சில்லறை விற்பனை ஸ்டோர்களில் நடைபெறும்.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம், சோனி நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் மாடல் PS5 கன்சோலின் விலையை ரூ. 5,000 உயர்த்தியது. இதனால் கன்சோலின் விலை ரூ. 44,990இல் இருந்து ரூ. 49,990 ஆக உயர்ந்தது.

    • நேற்று இரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற நிலையை கடந்தது. அதன் பின்னரும் தங்கம் விலைக்கு ஓய்வு என்பதே இல்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    கடந்த 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும், கடந்த 16-ந்தேதி ஒருசவரன் ரூ.82 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தையும் தாண்டியது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்தபடியே பயணிக்கிறது. இப்படியான தங்கம் விலையில் நேற்று அதிரடி உயர்வு இருந்தது.

    நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் தங்கம் விலை காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், மாலையில் சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்திருந்தது.

    அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையான தங்கம், நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

    கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.775-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 200-ம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்றும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-09-2025- ஒரு கிராம் ரூ.150

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    பச்சை பயறு சுண்டல்:

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்

    தேங்காய் துருவல் - 1/2 கப்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சில இலைகள்

    பெருங்காயம் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை

    * பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    * ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

    * வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

    * வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    எலுமிச்சை சாதம்:

    தேவையான பொருட்கள்:

    சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)

    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்

    வேர்க்கடலை - ½ கப்

    கறிவேப்பிலை - 1 கொத்து

    பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)

    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எலுமிச்சை - ½ 

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.

    அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.

    இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.

    ரவை கேசரி

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி மற்றும் திராட்சை

    சர்க்கரை அல்லது பனை வெல்லம்

    தண்ணீர் அல்லது பால்

    ஏலக்காய் தூள்

    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.

    * அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.

    * தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

    * ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
    • விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

    * 2021 - திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.

    * 2021 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.

    * 2021 - திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.

    * 2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.

    * 2022 - நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.

    * 2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.

    * 2022 - கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.

    * 2023 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    * 2023 - குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.

    * 2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்

    * 2023 - நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

    * பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.

    * பாரதியார் விருது - முருகேச பாண்டியன்

    * எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது - யேசுதாஸ்

    * பால சரஸ்வதி விருது - முத்து கண்ணம்மாள்

    * எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    அதன்படி, நவராத்திரியின் 3ம் நாளான இன்று சந்திரகாந்தா தேவியை வழிப்படுகிறது.

    சந்திரகாந்தா மந்திரம் என்பது நவதுர்கைகளில் மூன்றாவதான சந்திரகாந்தா தேவியை துதிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களாகும்.

    சந்திரகாந்தா தேவிக்கு உகந்த மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்..

    மந்திரங்கள்:

    *ஓம் தேவி சந்திரகாந்தாயை நமஹ.

    * பிண்டஜ ப்ரவராரூடா சண்டகோபாஸ்த்ரகைர்யுதா பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகந்தேதி விஸ்ருதா

    * யா தேவி சர்வபூதேஷு மாம் சந்திரகண்ட ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

    விளக்கம்:

    இந்த மந்திரம், துர்காதேவியின் ஒரு வடிவமான சந்திரகாந்தா தேவியை சரணடைவதாகவும், அவளுடைய அருள், தைரியம், பாதுகாப்பு, மற்றும் தடைகளை நீக்கும் வலிமையைக் கோருவதாகவும் பொருள்படும்.

    இந்த மந்திரங்கள் தேவியின் அருளைப் பெறவும், தடைகளை நீக்கவும், ஞானம் மற்றும் பலத்தை பெறவும் உச்சரிக்கப்படுகின்றன.

    • பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது.
    • திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜவுளித்துறை:-

    தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். அதனால் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், அதாவது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும்.

    காஞ்சிபுரம் பட்டு:-

    இந்த பட்டு உலகப்புகழ் பெற்றது. அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான ஜரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும்.

    கைத்தறிப் பொருட்கள்:-

    ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும். இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு.

    வெண்கலச் சிலைகள்:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.

    நாகர்கோவில் கோவில் நகை:-

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும்.

    பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்:

    தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு.

    பாரம்பரிய பொம்மைகள்:

    தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யால் விலை மலிவாகி, வெளிநாட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு போட்டியாகும்.

    தென்னை நார்:-

    பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது. பெண்கள் அதிகம் ஈடுபடும் இந்தத் துறையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.

    ஆவின்:-

    பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும்.

    மணப்பாறை முறுக்கு:

    திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது.

    மீன்பிடித்துறை:-

    தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும்.

    நோட் புத்தகம்:-

    சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ்:-

    ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.

    டிரோன்கள்:-

    சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ஆட்டோமொபைல்:-

    கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.

    பாதுகாப்பு:-

    சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன. ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ரெயில் பெட்டிகள்:-

    சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
    • திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.

    பிரம்மோற்சவம்

    திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.

    புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-

    பிரம்மோற்சவம் பிறந்த கதை

    லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.

    இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.

    அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.

    பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

    பிரம்ம ரதம்

    உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.

    தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.

    அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.

    அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.

    9 நாட்கள் உற்சவம்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

    சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

    பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.

    ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.

    ×