என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
    • மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.

    அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.

    அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.

    டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.

    • கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு வந்தது.

    மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400

    25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080

    24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-09-2025- ஒரு கிராம் ரூ.159

    27-09-2025- ஒரு கிராம் ரூ.159

    26-09-2025- ஒரு கிராம் ரூ.153

    25-09-2025- ஒரு கிராம் ரூ.150

    24-09-2025- ஒரு கிராம் ரூ.150

    • அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம்.
    • இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    உலக இதய தினத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி கொண்டாடுகிறோம்.

    இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே அனைவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    இதயநோய் வராமலும், வந்து சிகிச்சை பெறுபவர்களும் இதய நலனை பாதுகாக்க சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நல்லது. அதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    அந்த வகையில்,

    • சீரான உடல் எடை பராமரிப்பு

    • முறையான உணவுப் பழக்கம்

    • அன்றாட உடற்பயிற்சிகள்

    • மதுப்பழக்கம் தவிர்த்தல்

    • புகைப் பழக்கம் தவிர்த்தல்

    • மன அழுத்தமில்லா வாழ்க்கை

    ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

    இன்றைய சூழலில் அவரவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க முடியாமல் போகும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது. உடலின் சீரான எடையை பராமரிப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் ஆகியவை அவசியம்.

    மருத்துவ ரீதியாக உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. அவற்றுக்கெல்லாம் முறையான மருத்துவ சிகிச்சைகள் செய்துகொண்டால் உடல் எடையை தவிர்க்க முடியும். ஒருவருடைய உயரத்திற்கேற்ப இருக்க வேண்டிய உடல் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால், உடல் எடை அதிகம் என்றும், 20 சதவீதம் அதிகமாக இருந்தால் உடற்பருமன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

    அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம். அதிகக் கலோரி நிறைந்த உணவு, அதிக உப்பு, சர்க்கரை முதலியன இதய இரத்த நாள நோய்களைத் தூண்டக் கூடியவை. அவ்வகையில், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், வனஸ்பதி போன்ற தாவர எண்ணெய் வகைகளில் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது. அது, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    அதிகமாக இனிப்பு சாப்பிடுவது இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடித்து விட வழிவகுக்கிறது. அதே போல, அதிக உப்பு சேர்த்துக் கொள்வதும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கிறது. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகின்றன. அன்றாடம் மனித உடலுக்கு 5 கிராம் உப்பே போதுமானது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வொருவரும் தினமும் 12 முதல் 15 கிராம் அளவு வரை உப்பை உணவு மூலம் பெறுகின்றனர்.

    பாஸ்ட் புட் கலாச்சாரமும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த உணவு வகைகளில் அதிகப்படியான கொழுப்பும், உப்பும் இருப்பதால் தான் உடலுக்கு தேவையான கலோரி மிக அதிகமாக கிடைத்து இதய நோய்களை உருவாக்குகிறது. மேலும் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் பாஸ்ட் புட் வகைகளில் நார்ச்சத்து பெரிதாக இருப்பதில்லை. அதுவும் ஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

    வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உட்கொள்வது ரத்தத்தில் கொலஸ்ட்ரால், கொழுப்பு அளவு அதிகரிக்காமலும், இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. எனவே, தினமும் அவற்றை உணவில் காய்கறிகளோடு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் இதய சம்பந்தமான பாதிப்புகளை தடுக்கும் திறன் பெற்றவை என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவை இதயத்தின் இயக்கத்துக்கு நன்மை ஏற்படுத்துவது உண்மை.

    இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், வாரத்தில் 5 நாட்கள் என ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் ஏரோபிக் வகை பயிற்சிகளான நடத்தல், ஓடுதல், படியேறுதல் உள்ளிட்ட இதர உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலம், உடலில் உள்ள நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை இரண்டு மாதங்களுக்குள் 5 சதவீதம் வரை உயர்த்த முடியும் என மருத்துவ தெரிவித்துள்ளார்கள்.

    ஒவ்வொரு முறையும் உடல் எடையில் 2.5 கிலோ குறையும்போது நல்ல கொலஸ்டிராலின் அளவு உயர்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவை உட்கொள்வதும் மேற்கூறிய அளவு உடல் எடை குறைவதற்கு உதவும். அத்துடன், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை கூட்ட முடியும். ஏனென்றால், புகைக்கும் போது உடலில் சேரும் ரசாயனம் நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. புகைப்பழக்கத்தை தவிர்ப்பதாலும் எச்.டி.எல் அளவு சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் வீடியோ எடுக்கின்றனர்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

    இதனிடையே, விஜய் பிரசார பேருந்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் வீடியோ எடுக்கின்றனர். அப்போது பக்கத்தில் இருந்த பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பிரசார பேருந்தின் சக்கரத்தில் மோதுகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பைக்கில் சென்றவர்கள் சிறிது காயத்தோடு உயிர் பிழைத்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, விஜய் ரசிகர்களின் இத்தகைய செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. 

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் எட்டாம் நாளான மகாகௌரி வணங்கப்படுகிறது. துர்கா தேவியின் எட்டாவது அம்சமான மகாகௌரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.

    மந்திரம்:

    *ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா.

    இந்த மந்திரத்தை உச்சரிப்பது, எதிர்மறைகளை நீக்கி, உள் அமைதியைப்பெறவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி போன்ற நன்மைகளைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

    • த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார்.
    • கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

    ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை ஆணைய தலைவராக இருந்தவர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்றே தனது விசாரணையை தொடங்கினார். நேற்று பகல் கரூருக்கு சென்ற அவர், முதல்கட்டமாக 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.

    பிரசார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள். சம்பவ இடத்தில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்கு பிறகு விரைவில் விரிவான அறிக்கையை அவர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் எட்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
    • த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் தழுவிய கடையடைப்பில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடைபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-13 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி நண்பகல் 1.41 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : மூலம் மறுநாள் விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சரஸ்வதி ஆவாஹனம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-பெருமை

    கடகம்-களிப்பு

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-விருத்தி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- ஆசை

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-பயணம்

    மீனம்-கடமை

    • மகாகௌரி நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார்.
    • மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. மகாகௌரி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    மகாகௌரி என்பவர் நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார். இவர் நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

    நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாளில் வழிபடப்படும் மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர். மகாகௌரி என்றால் "வெண்மை" என்று பொருள்படும். மகாகௌரி தனது பக்தர்களின் பாவங்களை நீக்கி, மனதில் அமைதியையும், விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.

    "மகா" - பெரிய, "கௌரி" - பிரகாசம்.

    மிகச் சுத்தமான பளிங்கு போன்ற பொன்னிற-வெண்மையான உடல் கொண்டவள். மகாகௌரியின் வாகனம் வெள்ளை காளை (நந்தி). அவரது ஆடை வெண்மை நிறம்.

    சிவ மகாபுராணத்தில் மஹாகௌரி தேவி வரலாறு:

    பார்வதி தேவி சிறுவயதிலிருந்தே சிவபெருமானையே தனது கணவனாக அடைய விரும்பினாள். அவரது விருப்பத்தை கண்டு, நாரதர் அவருக்கு கடுமையான தவம் செய்ய அறிவுரை கூறினார்.

    இமயமலையின் காட்டில் பார்வதி தேவி பல வருடங்கள் கடுமையான தவம் செய்தாள். இதனால், அவளது உடல் மிகவும் வாடி, கருமையான நிறமடைந்தது.

    அப்போது, அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை அருளால் ஏற்றுக்கொண்டார். அவரது கருமை நிறம் நீங்குவதற்காக சிவபெருமான், பார்வதியை கங்கை நதியில் நீராடச் செய்தார்.

    நீராடிய பின்னர் பார்வதியின் உடல் பளிங்கு போன்ற வெண்மையுடன் மிளிர்ந்தது. அவள் மிகச் சுத்தமான, ஒளிவீசும் வடிவில் தோன்றினாள். அந்த உருவமே மஹாகௌரி என்று அழைக்கப்பட்டது.

    வெள்ளை நிறம், அவளது முழுமையான சுத்தத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. சிவனின் சக்தியாக, அனைத்து பாவங்களையும் அழித்து, பக்தர்களுக்கு புதிய வாழ்வு, அமைதி, முக்தி தருகிறாள்.

    நல்லவர்களைப் பாதுகாப்பதும், தீய செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதும் மகாகௌரியின் நோக்கம். மகாகௌரி தேவி தனது பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி கொண்டவள்.

    ஸ்லோகம்:

    'ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் மஹாகௌர்யை நம' என்று ஜபிக்க வேண்டும்.

    மகாகௌரியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் சாந்தி நிலைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படும்.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மனம் திறந்துள்ளார்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடுமபத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதே சமயம் த.வெ.க. சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

    ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
    • உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 40-ஆக உயர்ந்தது.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அன்றைய தினம் 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 40-ஆக உயர்ந்து நிலையில் இன்று 41 ஆக உயர்ந்துள்ளது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனிடையே, கரூர் அரசுமருத்துவமனையில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×