என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
- கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மனம் திறந்துள்ளார்.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடுமபத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதே சமயம் த.வெ.க. சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 40-ஆக உயர்ந்தது.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அன்றைய தினம் 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 40-ஆக உயர்ந்து நிலையில் இன்று 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, கரூர் அரசுமருத்துவமனையில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
- முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
அப்படியான நவராத்திரியின் எட்டாம் நாளில் மகாகவுரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் மயில் பச்சை நிறத்திலான ஆடையே பக்தர்கள் அணிந்து வழிபட வேண்டும். நீலம் மற்றும் பச்சை கலவையானது தனித்துவத்தை குறிக்கும் நிறமாகுகிறது.
- ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
- கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வ தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோக மாற்றம் உண்டு.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
நட்பால் நலம் கிடைக்கும் நாள். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
கன்னி
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
விருச்சிகம்
முயற்சிகளில் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
தனுசு
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களைச் செய்ய முடியாமல் போகலாம்.
மகரம்
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும்.
கும்பம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். கல்யாண முயற்சி கைகூடும்.
மீனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
- டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்ட் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனைக்குப் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது சமீப காலமாக தொடர் கதையாக உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. எனினும் வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
- பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னாள் வேளாண் மந்திரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
பீஜிங்:
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகினர்.
- புயல் தாக்குதலால் பிலிப்பைன்சில் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டன.
குவாங் டிரை:
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்தப் புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
- அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது.
அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.
பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் டிரெயிலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ராஜாசாப் படத்தின் டிரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

- இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன.
- கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி இன்று இரவு பார்வையிட்டார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர், வேலுசாமிபுரத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுவதுமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவரின் உடல்நிலை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்ற அனைத்து நோயாளிகளும் உடல்நலம் தேறி வருகின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 60 முதல் 70 மருத்துவர்கள் குழுவுடன், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
16 மருத்துவர்களைக் கொண்ட தனிக்குழு நியமிக்கப்பட்டு உடற்கூராய்வு பணிகள் நடைபெற்றன.
இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மூச்சுத்திணறல் எனத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.






