கரூரில் 40 பேர் உயிரிழப்பதற்கான முக்கிய காரணம் என்ன? - தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்

இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன. கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூரில் 40 பேர் உயிரிழப்பதற்கான முக்கிய காரணம் என்ன? -  தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்
Published on

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி இன்று இரவு பார்வையிட்டார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர், வேலுசாமிபுரத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுவதுமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவரின் உடல்நிலை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்ற அனைத்து நோயாளிகளும் உடல்நலம் தேறி வருகின்றனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 60 முதல் 70 மருத்துவர்கள் குழுவுடன், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

16 மருத்துவர்களைக் கொண்ட தனிக்குழு நியமிக்கப்பட்டு உடற்கூராய்வு பணிகள் நடைபெற்றன.

இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மூச்சுத்திணறல் எனத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com