என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
    • AIMIM போட்டியிட்ட ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

    கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி AIMIM கட்சி வேட்பாளர்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளனர்.

    ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் என்ற 2 தொகுதிகளில் AIMIM போட்டியிட்டது. ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    ஓக்லா தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 23639 வாக்குகள் அதிகம் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 12739 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

    முஸ்தபாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 17578 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 11763 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

    • மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
    • அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார்.

    மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கல்லூரிக்கு பக்கத்து ஊரு தான் எனது வீடு. அடிக்கடி இந்த வழியாகத்தான் செல்வேன். இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கின்றது இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. மேடையில் பேச வேண்டும் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும், அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

    என்னை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை இழுத்து வந்துள்ளார்கள். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, அதற்காகத் தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை செய்யுங்கள் என்று நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன், நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்போம். நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தா கூட சொல்லக் கூடாது.

    நான் நடித்த அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசும். மொழி, மதம், ஜாதிகளை கடந்து நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவக் கூடாது, தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம். மனிதம் நமக்குள்ளே என்றும் இருக்க வேண்டும்.

    அடுத்த படம் மதுரையில் தான் இயக்க உள்ளேன். காதலா நட்பா என்று பார்த்தால் எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சசிக்குமார் தற்பொழுது டூரிஸ்ட் பேமிலி  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜுமுருகன் இயக்கத்தில் ௨ மை லார்ட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது.
    • சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

    முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

    ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.

    முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    டெல்லி தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

    இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

    டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

    அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.

    இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

    டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

    மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.

    அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.

    தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

    பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.

    ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.

    இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
    • மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைவாக பெற்றுத் தர வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளைய கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவிகள் அதே பள்ளியின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியது. அதன்பின் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிர்வலைகளை உருவாக்கியது.

    பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் பெற்றோர் தங்களின் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மையங்களாக மாறினால், இனிவரும் காலங்களில் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோரே அஞ்சும் நிலை உருவாகி விடும்.

    இத்தகைய கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றனவா? என்ற அதிர்ச்சியும், இந்தக் கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஏக்கமும், தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும்? என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும்.

    மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பல எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

    கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது,

    குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர்.

    இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், இந்த 8 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்த நிலையில் அந்த 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,

    * கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சுகாதாரத்துறை, கூட்டுத்துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
    • ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?

    மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."

    "திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

    • காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர்.
    • என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை.

    உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டை கடந்து கார் ரெயில் தண்டவாளத்திற்குள் நுழைந்தது.

    ஓட்டுநர் குடிபோதையில் காரை சாலையில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரெயில் தண்டவாளத்தில் வேகமாக செலுத்தினார். அதிவேகமாக சென்றதால், தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது.

    ரெயில் தண்டவாளத்தில் கார் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை நோக்கி விரைந்து சென்றனர். காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்ததாக தெரிகிறது.

    என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவர் தனது காரை ரெயில் தண்டவாளத்தில் கொண்டு சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் உடனடியாக காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். கேட் கீப்பர், கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை அனுப்பினார், அதன் பிறகு அதே ரெயில் பாதையை நெருங்கி டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.

    ரெயில் சுமார் 35 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து நிலைய கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீட்புப் பணியை மேற்கொண்டு, நகராட்சி ஹைட்ரான்ட்டின் உதவியுடன் காரை தண்டவாளத்திலிருந்து அகற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில், தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்பட்ட பின்னரே செல்ல முடிந்தது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர்.
    • தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.

    மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.

    இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். நமது மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் இந்த செயல் உள்ளது.

    இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்றதாக இருந்ததில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகம் என்பதை பா.ஜ.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம்.
    • ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 2022 முதல், 2023 2024 வரை, தள்ளுபடி செய்யபபட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட வில்லையென்றால், பொது மக்களுக்கு எப்படித் தெரியும்?

    அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார்.

    அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.

    எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

    மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொருகதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டி விட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?

    தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.

    இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொது மக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

    அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது
    • பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்

    டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை.

    10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.

    இந்நிலையில் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிக்கு ராகுல் காந்தியை வாழ்த்தியுள்ளார் கேடி ராமா ராவ்.

    காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கேடி ராமா ராவ் கூறுகையில், ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்.

    பிரதமர் மற்றும் பாஜக கையில் உள்ள ராகுல் இப்போது செய்துகொண்டிருப்பதை தொடர்ந்து செய்து வருவது கே.சி.ஆர். கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் போன்ற வலுவான மாநில தலைவர்களை பலவீனப்படுத்துகிறது.

    டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் இப்போதாவது காங்கிரஸ், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், நாட்டிற்கு, குறிப்பாக பாஜகவைத் தடுத்து நிறுத்தும் வலுவான மாநில சக்திகளுக்கு ஏற்படுத்திய சேதத்தையும் உணர்ந்துள்ளது என்று கூறினார்.

    மேலும் "பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

    ×