என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
    • உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.

    * ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

    * இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?

    * உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    * மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?

    * எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
    • மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் மார்ச் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முழு பட்ஜெட்டுகளை (நிதி நிலை அறிக்கை) தாக்கல் செய்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும். எந்தெந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்து பட்ஜெட் தயாரித்து வருகிறார்.

    ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையில் மத்திய அரசிடம் எதிர்பார்த்த நிதி தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்காத சூழ்நிலையிலும் இந்த ஆண்டுக்கான 'பட்ஜெட்' தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் 15 நாட்களில் முழுமை பெறும் என தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து அடுத்த (மார்ச்) மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபை பேரவை விதி 26 (1)-ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டி உள்ளேன். அன்றைய தினமே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையினை (பட்ஜெட்) தாக்கல் செய்வார்.

    மேலும் பேரவை விதி 193 (1)-ன்கீழ் 2025-26-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189 (1)-ன் கீழ் 2024-2025-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளையும் மார்ச் மாதம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்ய, பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

    2026-ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால் மக்களைக் கவரும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும்.

    எனவே இந்த பட்ஜெட்டை பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது
    • ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

    வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 18) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,611 புள்ளிகளாக உள்ளது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 129 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கி 22,829 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.

     பங்குச்சந்தைகள் 10வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது.

    முன்னதாக 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

    சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

    டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, விப்ரோ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டி வருகின்றன.

    அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி லைஃப், டாடா ஸ்டீல் ஆகியவை நஷ்டமடைந்தன. ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன்  வர்த்தகமாகின்றன. 

    • நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
    • இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

    முன்னதாக, கடந்த 2019-ல் விக்கிரவாண்டி சட்டசபை உறுப்பினராக இருந்த ராதாமணி இறந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். 

    • ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • சாப்பிட்ட பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டும். சோர்வாக இருந்தால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம்.

    மாறிவரும் வாழ்க்கை முறை உணவுப் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. ஒரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவது. பசிக்கிறதோ இல்லையோ ஏதாவது சாப்பிடுவது. தீங்கு விளைவிக்கும்.

    உண்மையில், நம் உடல் நமக்கு எப்போது பசிக்கிறது. எப்போது உணவு தேவைப்படுகிறது என்பதை நமக்குச் சொல்கிறது. அதை நாம் பின்பற்ற வேண்டும்.

    ஆனால் இப்போது பலர் தங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அதிக எடை முதல் நீரிழிவு வரை பல நோய்கள் வருகின்றன.

    உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான சக்தியை மீண்டும் பெறவும். ஒருவர் ஊட்டச்சத்து மதிப்புகள் நிறைந்த சீரான உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் குறிப்பாக இளைஞர்களிடையே கவலைக்குரிய ஒரு காரணமாகும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். பலருக்கு அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

    உண்மையில் பசிக்காவிட்டாலும் கூட அவர்களின் உடல் விரும்பாவிட்டாலும் கூட சாப்பிடுகிறார்கள். இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.

    பலர் டி.வி. அல்லது மொபைல் போன்களை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இதன் பொருள் நீங்கள் உண்ணும் உணவின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. வயிறு நிரம்பியதாக உணராததால் மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

    இதனால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது.

    பொதுவாக நமது வெறும் வயிற்றில் 75 மில்லி லிட்டர் தண்ணீர் இருக்கும் இது 950 மில்லிலிட்டர்கள் வரை பொருட்களை வைத்திருக்க முடியும்.

    ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    சாப்பிட்ட பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டும். சோர்வாக இருந்தால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரித்து பின்னர் குறையக்கூடும். இதனால் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.

    உணவு முறைக்கும் தூக்கமின்மைக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. மோசமாக தூங்கும் 60 சதவீத மக்கள் இரவில் சிற்றுண்டி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல. எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் உடலைப் பாதிக்கிறது. சிலருக்கு வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

    இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஏற்படும் சேதம் மிக அதிகம்.

    வேகமாக சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    அதிகமாக சாப்பிடுவது மனதையும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பதட்டம் அதிகரிக்கிறது என்று மாறிவிடும்.

    சரியாக மெல்லாமல் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    உங்கள் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். நல்லது என்பதற்காக அதிகமாக சாப்பிடுவது மிக விரைவாக சாப்பிடுவது. இரண்டுமே நல்லதல்ல.

    மதுவுக்கு அடிமையானவர்கள் அதிக உணவை உட்கொள்வதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

    மேலும் சிலர் சாப்பிடும்போது குளிர் பானங்கள் குடிப்பார்கள். இது உண்ணும் உணவின் அளவையும் அதிகரிக்கிறது. இந்தப் பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவு பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.
    • அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.

    கடந்த 2023 ஆம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு, 1,45,709 பேர் பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40,901 பேர் என, மொத்தமாக 1,86,610 இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை சார்ந்த வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 20% இடங்களுக்கு, 6,101 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதனை அடுத்து இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெற்று, எழுத்துத் தேர்வு முடிவுகள் 26.09.2023 அன்று வெளியிடப்பட்டன. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 07.11.2023 முதல் 10.11.2023 வரை நடைபெற்று அவற்றில் தேர்வு பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 19.12.2023 முதல், 10.01.2024 வரை நடைபெற்றது.

    நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் கடந்த 29.01.2024 அன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, கைரேகைப் பதிவு உள்ளிட்டவை, 10.02.2024 முதல் 15.02.2024 வரை நடைபெற்றது. மேலும், அவர்களுக்கான கல்விச் சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கும் பணிகள், கடந்த 25.02.2024 முதல் 05.03.2024 வரை நடைபெற்றன.

    இதற்கிடையே, இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 24.04.2024 அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 21.06.2024 அன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக் கடந்த 08.07.2024 அன்று உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு 05.09.2024 முதல் 08.09.2024 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

    கடந்த 29.01.2024 அன்று வெளியிடப்பட்டிருந்த முதல் இறுதிப் பட்டியலில், தேர்வு செய்யப்பட்டவர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் துறை சார்ந்தவர்களுக்கான சிறப்பு மதிப்பெண், பிறந்த தேதி அவர்கள் சார்ந்த சமூகப் பிரிவு உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம், இந்தத் தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அமைந்திருந்தன.

    ஆனால், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலில், தேர்வாளர்களின் பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதனால், முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 41 இளைஞர்கள் முறையான விளக்கம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    இதனை அடுத்து இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 28.10.2024 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது.

    ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?

    அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருகிறது. தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், திமுக அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா?

    திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இனியும் காலதாமதமாக்காமல், உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும். இனி வருங்காலங்களிலும், இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமான பெண் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பெண் நோயாளிகளுக்கு நர்சிங் ஊழியர்கள் ஊசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ காட்சிகள் யூடியூப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார் என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனை இயக்குனரிடம் போலீசார் விசாரித்தபோது மருத்துவமனையின் சி.சி.டி.வி. சர்வர் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
    • சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர்.

    சீனா உலகிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள முதல் நாடாக உள்ளது.

    தற்போது சீனாவில் உள்ள 14 மில்லியன் மக்கள் தொகையில் 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். வருகிற 2035-ம் ஆண்டு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல சில்வர் ரெயில் என்ற பிரத்யேக சுற்றுலா ரெயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.

    சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர். அவர்களுக்காக இந்த புதிய ரெயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த 10 ஆண்டுகளில் முதியவர்கள் மூலம் 30 ட்ரில்லியன் யுவான் வளர்ச்சி இலக்கை அடைய நிர்ணயித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய சில யாத்ரீகர்கள் கடுமையான வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 2 கர்நாடக கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். (GBS) நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், யாத்ரீகர்களின் நோய்க்கான காரணத்தை அறிய அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    ஜி.பி.எஸ். உள்ள 3 பேரில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் உள்ளது. இது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், ஜி.பி.எஸ். நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க தனது துறை முழுமையாகத் தயாராக உள்ளது.

    மகாராஷ்டிராவின் புந்தர்பூரில் இருந்து திரும்பிய 60 யாத்ரீகர்களில் 33 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்றும், அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

    இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
    • 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது

    கோவிட்-19, எச்1என்1 தொற்று, பறவை காய்ச்சல் ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் தோன்றுவதுடன், பிளேக், ஸ்க்ரப் டைபஸ், லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற தொற்றுகள் மீண்டும் தோன்றுவதும் நாட்டில் தொடர்ச்சியான தொற்று நோய் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன.

    இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் தொற்று நோயியல் விசாரணையை மேற்கொள்வதிலும், தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் தேசிய தொற்று நோய்களுக்கான மையம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அது பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த பல நோய்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்திருக்கிறது.

    இந்த மையம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியிருப்பதாவது:-

    தேசிய தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி 2019 முதல் 2024 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இந்த 6 ஆண்டுகளில் 11,04,198 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,516 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் 301 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெங்கு காய்ச்சலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

    2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. 2023-ம் ஆண்டில் 17,426 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 18,534 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 2023-ல் 153 பேரும், 2024-ல் 71 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.

    டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 6 ஆண்டுகளில் 189 பேர் டெங்குவுக்கு இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் 171 பேர் இறந்திருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 132 பேரும் டெங்குவுக்கு இறந்துள்ளனர்.

    அதே நேரத்தில் இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் 2024-ம் ஆண்டில் 21 மாநிலங்களில் டெங்கு இறப்புகள் பதிவாகவில்லை. இந்த ஆண்டில் கூட கடந்த ஒன்றரை மாதத்தில் அங்கு 4 டெங்கு இறப்புகள் நடந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டெங்கு காய்ச்சல் பரவலுக்கு மூல காரணம் ஏடிஸ் வகை கொசுக்கள் ஆகும். அவற்றை அழிக்கவும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கேரளாவில் டெங்கு காய்ச்சல் அனைத்து காலக்கட்டங்களிலும் பரவியபடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
    • தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!

    தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!

    "போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

    பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!" எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்!

    தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,970-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    ×