என் மலர்
இந்தியா

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் - விசாரணைக்கு உத்தரவு
- வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமான பெண் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பெண் நோயாளிகளுக்கு நர்சிங் ஊழியர்கள் ஊசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ காட்சிகள் யூடியூப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார் என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை இயக்குனரிடம் போலீசார் விசாரித்தபோது மருத்துவமனையின் சி.சி.டி.வி. சர்வர் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






