என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
    • தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!

    தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!

    "போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

    பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!" எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்!

    தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,970-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
    • இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். இது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (நெசெட்) பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) ஒரு நிவாரண மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.

    இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நெசெட் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த அக்டோபர் 2024-இல் இஸ்ரேல் பாராளுமன்றம், அதன் பிரதேசத்தில் UNRWA-இன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேலிய அதிகாரிகள் அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்திருப்பதை தடை செய்வதற்கும் அழைப்பு விடுத்து இரண்டு சட்டங்களை இயற்றியது.

    ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அனைத்து வளாகங்களையும் காலி செய்து, இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதிக்குள் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்துமாறு இஸ்ரேல் UNRWA-க்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் UNRWA-க்கான நிதியைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1948 அரபு-இஸ்ரேலிய போரை அடுத்து, பொது சபைத் தீர்மானம் 302 (IV) மூலம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, UNRWA நிறுவப்பட்டது. இதில் பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீனிய அகதிகளுக்கு "நேரடி நிவாரணம் மற்றும் பணித் திட்டங்களை" வழங்க, "1946 ஜூன் 1 முதல் 1948 மே 15 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனமாக இருந்தவர்கள் மற்றும் 1948 போரின் விளைவாக வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்" என்று வரையறுக்கப்படுகிறது.

    பல தசாப்தங்களாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறிப்பாக மேற்குக் கரை மற்றும் காசா பகுதி உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இதில் சுகாதார வசதிகள், பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் அடங்கும்.

    இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மசோதா அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உதவி வழங்குவதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தினார். மேலும் இந்த தடை "பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

    இது குறித்து ஐ.நா. உதவி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செயல் தலைவர் ஜாய்ஸ் சுயா, "இந்த முடிவு ஆபத்தானது மற்றும் மூர்க்கத்தனமானது" என்று தெரிவித்தார். UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லாசரினி, இந்த மசோதாக்கள் "பாலஸ்தீனியர்களின் துன்பத்தை அதிகரிக்கும். மேலும் இது தண்டனைக்குக் குறைவானது அல்ல" என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
    • நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.

    இந்த நிலையில், நியாய விலைக்கடைகளுக்கு தேவையான துவரம் பருப்பு, பாமாயிலை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

    நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான 6 கோடி பாமாயில் பாக்கெட், 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    • டானாபூர் ரெயில்வே கோட்ட மேலாளர் (DRM) ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
    • டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரெயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்று அமைதியாக தெளிவுபடுத்தினார்.

    பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) டானாபூர் ரெயில்வே கோட்ட மேலாளர் (DRM) ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சில பெண்கள் சிக்கினர்.

    அவர் அந்த பெண்களிடம், ஏன்? டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, "நாங்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மோடி ஜி கூறினார்" என்று பெண்கள் நம்பிக்கையுடன் பதிலளித்தனர்.

    இதைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த ஜெயந்த் காந்த் சவுத்ரி சிரித்தபடியே மேலும் உரையாடினார்.

    மேலும் அவர்களிடம் பேசியதில், இந்தப் பெண்கள் டிக்கெட் வாங்காமல் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு மகா கும்பமேளாவிற்கு (புனித நீராடுதல்) பயணம் செய்தது தெரியவந்தது.

    அந்த பெண்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரெயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்றும் அமைதியாக தெளிவுபடுத்தினார்.

    இந்த சுவாரஸ்யமான உரையாடலை நிலையத்தில் இருந்த ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் நீண்ட தூரம் பயணிப்பதற்காக ரெயில் சேவையை பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இயக்கப்படும் ரெயில்கள் பராமரிப்பு பணி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவது அல்லது நேரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பிற்பகல் 3 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படுவதால் பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.
    • ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருமணம் என்றாலே விருந்து உபசரிப்புக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இன்னார் வீட்டு திருமணத்தில் சாப்பிட்டோம், சாப்பாடு பிரமாதம் என்று உறவினர்கள் கூறுவதை கேட்டு திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைவார்கள்.

    அதே சமயம் சாப்பாடு ருசியாக இல்லை என்றால், 'பல லட்சம் ரூபாய் செலவு பண்ணி சாப்பாடு ஒழுங்காக இல்லையே' என்று குறைபட்டு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் திருமண விருந்து பிரச்சனை, கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடியதுதான். உத்தரபிரதேசத்தில்தான் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தின் காஸ்கன்ஜ் மாவட்டம் சஹாவர் பகுதியில் திருமண விழா நடந்தது. மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.

    உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட அருண்குமார், 'சாப்பாடு ருசியாக இல்லை. சரியாக வேகவில்லை. தரமாகவும் இல்லை' என்று குறை கூறினார். இது மணமகள் வீட்டாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மணமகளின் மாமா விஜயகுமார் என்பவர், ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து அருண்குமாரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். கொண்டாட்டமாக இருக்க வேண்டிய திருமண வீடு, கொலைக்களமாக மாறியதால், உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் குண்டு பாய்ந்த விஜயகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வாலிபரை சுட்டுக்கொன்ற விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
    • டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி, வருகிற மே மாதத்திற்கான சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியிடப்பட உள்ளன.

    சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனா சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீட்டிற்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வருகிற 21-ம் தேதியும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், வருகிற 24-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.

    இந்த டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூல் செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி பணத்தை இழந்தவர்களில் ஒருவரான ரவீந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதன்பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. எனினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்.
    • காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டொரண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் காயமுற்றனர்.

    இது குறித்து விமான நிலையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மினியாபொலிஸ்-இல் இருந்து வந்த டெல்டா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமான சேவைகள் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்."

    விபத்தில் சிக்கிய விமானம் மிட்சுபிஷி CRJ-900LR மாடல் ஆகும். பனிப்படர்ந்த ஓடுபாதையில் விமானம் தலைக்கீழாக விழுந்து இருப்பதை காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. விபத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்பு படையினர் பயணிகளை மீட்டனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கனடா நாட்டு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விமான நிலையம் உள்ள பகுதியில் பனிப்பொழிவு இருந்தது என்றும் மணிக்கு 51 முதல் 65 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய CRJ-900 ஒரு ஜெட் விமானம் ஆகும். இதனை கனடா ஏரோஸ்பேஸ் நிறுவனமான பாம்பார்டியர் தயாரித்தது. கடந்த ஜனவரி 29-ம் தேதி இதே ரக மாடல் ஒன்று நடுவானில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 



    • தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது.
    • வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்.

    சென்னை:

    நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிக்கிறார்.

    பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பை சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

    தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

    வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.

    அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம், உரக்கக் குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×