என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்லடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டனர்.
    • போலி துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்சொல்லி பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை தமிழ்நாடு காவல்துறை மிரட்டுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா - கள்ளச்சாரய விற்பனை நிகழாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்துள்ளது.

    குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் திறனற்றதாக திணறிவரும் திமுக அரசின் காவல்துறை, குற்றம் நடைபெற்றதற்கு பொய்க்காரணம் கற்பிக்கவும், அப்பாவிகளை குற்றவாளிகளாக கட்டமைக்கவும் முயல்வது வெட்கக்கேடானது. திமுக அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க வேண்டுமென்றால், குற்றங்களை தடுக்கவும், உண்மைக்குற்றவாளிகளை விரைந்து தேடிப்பிடிக்க வேண்டுமே தவிர, குற்றத்தை மூடிமறைக்க முயல்வது காவல்துறையின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

    அப்பாவிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அவர்களை போலி துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமது ஆட்சியில் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது பொயக்குற்றம் சுமத்தி பழிவாங்கும் கொடுமைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் திமுக அரசின் சாதனையா? இதுதான் திராவிடம் கட்டிக்காக்கும் சமூகநீதியா? சமத்துவமா? விளிம்பு நிலை பழங்குடி மக்கள் மீதான இத்தகைய அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? காவல்துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு புனையவும், அவதூறு பரப்புவும் காட்டும் வேகத்தில், அணுவளவு வேகத்தையாவது மக்களை காப்பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும் தமிழ்நாடு காவல்துறை காட்டினால் சட்டம் ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்!

    ஆகவே, திருப்பூர் மாவட்டம், சேமலைக் கவுண்டன்பாளைய மூவர் கொடூர கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும், விசாரணை என்ற பெயரில் பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை துன்புறுத்தும் கொடும்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவிதித்துள்ளார்.

    • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டார்.

    துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த வகையில், போட்டியின் 8-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வங்காளதேசம் அணியின் தன்சித் ஹாசன் (25) தனது விக்கெட்டை பறிக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து இதே ஓவரின் மூன்றாவது பந்தை முஷ்ஃபிகுர் ரஹிம் எதிர்கொள்ள அவரும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுக்கும் சூழல் உருவானது. அதன்படி 8-வது ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட் எடுத்தால் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருக்கலாம்.

    இந்த பந்தை எதிர்கொண்ட ஜேகர் அலி தடுப்பாட்டம் ஆட முயற்சித்தார். எனினும், இந்த பந்து அவரது பேட்-இல் பட்டதும் ஸ்லிப்-இல் நின்றிருந்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆக மாறியது. பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக அந்த கேட்ச்-ஐ தவறவிட்டார்.

    கேட்ச்-ஐ தவறவிட்டது, அக்சர் படேலுக்கு ஹாட் ட்ரிக் விக்கெட் பறிபோனது என களத்தில் கோபமுற்ற ரோகித் சர்மா தனது கைகளால் மைதானத்தின் தரையை வேகமாக குத்தினார். மேலும் அக்சர் படேலிடம் கேட்ச்-ஐ தவற விட்டதற்கு மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 



    • திமுக ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.
    • மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இப்பொழுது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.

    கடந்த அதிமுக ஆட்சியைபோல இல்லாமல் இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.

    இதற்கு முன் மாணவிகள் அச்சம் உணர்வோடு இருந்தார்கள். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தனது மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ என்ற பயம் இருந்தது.

    இப்போது மாணவிகளுக்கு தைரியம் வந்து இருக்கிறது. மாணவிகள் மத்தியில் அச்சம் நீங்கியுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது.

    குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது.

    இவ்வாறு கூறினார்.

    • தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் படத்தை பார்த்த லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது " திரைப்படத்தை பார்த்தேன் மிகவும் எனெர்ஜட்டிக்காகவும் , புத்துணர்ச்சியாகவும் இருந்தது. காதல் மற்றும் நட்பை மிகவும் எதார்த்தமாக பதிவிட்டுள்ளார். தனுஷ் சார் சொன்ன மாதிரி ஜாலியா வாங்க ஜாலியா போங்க. இப்படம் திருச்சிற்றம்பலம் வைப்ஸ்-ஐ தருகிறது" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இஸ்ரேலை சேர்ந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
    • இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பிணைக்கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் தகவல்

    4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர்.

    இவை 2023 அக்டோபர் 7, தாக்குதலின் போது கடத்தப்பட்ட ஷிரி பிபாஸ் என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் மற்றும் 83 வயதான ஒடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்கள் என நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்த 4 பேரும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் பேனர் வைத்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தனர். பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
    • கோ பேக் மோடி இல்லை நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, " GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், " நீங்க GET OUT MODI என ட்வீட் போடுங்கள்.. நாளை காலை 6 மணிக்கு நான் GET OUT STALIN என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்.

    நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்றார்.

    முன்னதாக, கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

    அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.

    வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்றார்.

    • இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட்.

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சௌமியா சர்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 50 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    இந்திய அணி சார்பில் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வங்காளதேசம் சார்பில் துவக்க வீரரான தன்சித் ஹாசன் மட்டும் 25 ரன்களை எடுத்தார்.

    • பெண்ணிடம் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது.
    • ரோந்து காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

     சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவரிடம், 'நீங்கள் தம்பதியா?' என கேட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவலர் 'நீங்கள் கணவன் மனைவியா?' என கேட்டு மிரட்டியுள்ளார்.

    இதனை சம்பந்தப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
    • உதயநிதி தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, " தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்" என்று அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.

    உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது ?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'.
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'டிராகன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    'டிராகன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும். இந்த நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் டிராகன் - ப்ளாக்பஸ்டர் என பதிவிட்டுள்ளார்.

    அதற்கு நன்றி தெரிவிக்கு வகையில் பிரதீப் ரங்கநாதன் " நீங்கள் நேரம் எடுத்து எங்கள் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • பொக்சோ வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.

    இதனையடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்று தெரிந்ததை கண்டுபிடித்தனர்.

    ரமேஷ் சிங் என்பவர் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங்கின் பின்னணியை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

    பின்னர் 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ரமேஷ் சிங், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கையேடு வெளியே வந்த ரமேஷ் சிங் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×