என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எப்போது தேர்தல் வரும், அம்மாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
- விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை என்றென்றும் இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் 'தங்கத் தாரகை' இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'அம்மா புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.
பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய புரட்சித் தலைவி அம்மாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.
அம்மாவின் அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா தி.மு.க. அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.
எப்போது தேர்தல் வரும், அம்மாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.
பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.
தமிழ் நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, புரட்சித் தலைவி அம்மாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது. இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத்திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா. அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது.
இன்றைக்கு, தி.மு.க. அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.
பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டி ருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது.
இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்.
தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப் போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.
இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும்
காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.
அ.தி.மு.க.தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று நம் இதய தெய்வம் அம்மா சூளுரைத் தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாள். அ.தி.மு.க. தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
- நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.
- டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் 90 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் பெலகாவியில் இருந்து மராட்டிய மாநிலம் சுலேபாவிக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக மகாதேவப்பா என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவர் மராட்டியத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் டிக்கெட் எடுக்கும்படி கன்னடத்தில் கூறினார். அதற்கு அவர்கள் மராத்தி மொழியில் பேசினர். இதை கேட்டு கோபம் அடைந்த மகாதேவப்பா, கன்னடத்தில் பேசும்படி மாணவ-மாணவிகளை திட்டினார்.
இதை பஸ்சில் பயணித்த மராட்டிய இளைஞர்கள் பார்த்து மகாதேவப்பாவிடம் தகராறில் ஈடுபட்டனர். பலேகுந்திரி என்ற இடத்தில் பஸ் நின்றதும், தகராறு முற்றியது. அப்போது பஸ்சுக்குள் நுழைந்த சிலர் மகாதேவப்பா மற்றும் டிரைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மாரிகாலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் மகாதேவப்பா, மாரிகாலா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பலேகுந்திரி கிராமத்தை சேர்ந்த மாருதி துருமுரி, ராகுல் ராஜூ, பாலு கோஜகேகர் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவனை தவிர்த்து மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மராட்டியத்தை சேர்ந்த மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் கண்டக்டர் மகாதேவப்பா மீது போலீசார் 'போக்சோ'வில் வழக்குப்பதிவு செய்தனர். மகாதேவப்பா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், மோசமான சைகைகளை செய்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் மாரிகாலா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கூறினர். மேலும் கர்நாடக-மராட்டிய எல்லையிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் மராட்டிய அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் சாலையில் டயர்கள், உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் சித்ரதுர்காவில் உள்ள குய்லால் சுங்கச்சாவடியில் குய்லாலா சுங்கச்சாவடி அருகே நவ நிர்மாண் சேனா அமைப்பினர் மகாராஷ்டிராவை சேர்ந்த பஸ் டிரைவர் ஹரிஜாதவினர் முகத்தில் மைபூசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் பஸ் முழுவதும் கருப்பு வண்ணப்பூச்சை தூவினர். ஜெய்கர்நாடகா, ஜெய் கன்னடம், பெல்காம் எங்களுடையது என பஸ்சில் எழுதி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சேனா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து பெல்காமுக்கு புறப்பட்ட பஸ்களை கருணாட விஜய சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தி சித்ரதுர்கா பஸ் நிலையத்தில் போராட்டத்தல் ஈடுபட்டனர். இந்நிகழ்வின்போது ஆண் பயணிகளுக்கு சேலைகள் உடுத்தி, பூக்கள் வழங்கப்பட்டன. பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பெலகாவியை விட்டு மகாராஷ்டிரா செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர்.
அதேநேரம் மராட்டியத்துக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் மீது அங்கிருக்கும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெலகாவி மாவட்டம் மராட்டியத்துக்கு சொந்தமானது. இம்மாவட்டத்தை கர்நாடகாவில் இருந்து பிரித்து மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்க்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மராட்டிய மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதை தடுக்காதீர்கள் என கூறி போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே பயணிகளின் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு இருமாநில பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருமாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையான நிப்பாணி தாலுவாவில் உள்ள கோகனொல்லி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.
- நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.
சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அரசு இந்தியை எல்லாம் திணிக்கவில்லை.
* மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.
* இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
* நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.
* புதிய கல்விக்கொள்கை மூலம் 3-வதாக விருப்பப்படும் ஒரு மொழியை கற்கலாம் என மத்திய அரசு கூறுகிறது.
* எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டியது தானே.
* கால சூழல் மாறுதலுக்கு ஏற்ப 3-வது ஒரு மொழியை கற்க சொல்கின்றனர் என்று கூறினார்.
- பக்கத்து கிராமத்தை சேர்ந்த நபர் கொண்டாட்டங்களுக்காகக் கொண்டு வந்த துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தினார்.
- துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது துப்பாக்கி சுடப்பட்ட சத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.
பஞ்சாபில் திருமணத்தில் துப்பாக்கி வெடித்து கொண்டாடும்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கோரயா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான பரம்ஜித் சிங். இவரது மனைவி அவ்வூரின் கிராம சபை தலைவர்(சர்பாஞ்ச்) ஆவார். கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்வில் பரம்ஜித் சிங் கலந்துகொண்டு மற்றவர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபர் கொண்டாட்டங்களுக்காகக் கொண்டு வந்த துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தி வானத்தை நோக்கி சுடமுயன்றனார்.
அதில் ஒரு குண்டு அருகில் நடனமாடி கொண்டிருந்த பரம்ஜித் சிங் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பரம்ஜித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக கீழே விழுந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தங்களிடம் கூறியதாக அவரது பரம்ஜித் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று மாலை வெளியாகி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் துப்பாக்கிச்சூடு நடப்பதும் உடனே பரம்ஜித் கீழே சரிந்து விழுவதும் பதிவாகி உள்ளது. எனவே துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்ய வேண்டும் என்று கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது துப்பாக்கி சுடப்பட்ட சத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.
- தமன்னா, அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ஓடேலா-2' படத்தில் பெண் துறவியாக நடித்துள்ளார்.
- தமன்னா தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
நடிகை தமன்னா, அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவரவுள்ள 'ஓடேலா-2' படத்தில் பெண் துறவியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. விழாவில் தமன்னா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் தமன்னா தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
தமன்னா சமீபகாலமாகவே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
- தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.
நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழ கத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 15 ஆண்டில் 2 முறை காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரெயில் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளையும் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, மதியம் 12.00, 1.00, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ர ரெயில் நிலையம் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
- நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
- இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.
இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.
தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தி.மு.க.வினர் அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- 21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
- சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன. இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாக கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்காவின் எலான் மஸ்க் தலைமையிலான DODGE(செயல்திறன்) துறை அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
மேலும் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், "21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது, எங்களுக்கும் வாக்கு சதவீத அதிகரிப்பு வேண்டும் அல்லவா?" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010-12 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.
இதை உறுதோபடுத்தும் வகையில் "2008 ஆம் ஆண்டு முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு திட்டத்திற்கும் USAID இலிருந்து இந்தியா எந்த நிதியையும் பெறவில்லை" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் ஒரு ஆய்வறிக்கையை நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரசை பாஜக விமர்சித்தது. ஆனால் அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி இதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையிலும், 'DODGE வெளியிட்ட பொய்யால் இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது' அமெரிக்கா இந்தியாவுக்கு அதுபோன்ற எந்த தேர்தல் நிதியும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கட்டுரைகளை மேற்கோள் காட்டி மோடி மற்றும் டிரம்ப் தொடர்பை குறிப்பிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, இது இரண்டு நண்பர்களுக்கு (மோடி - டிரம்ப்) இடையிலான விவகாரம். இந்திய தேர்தலில் அழுத்ததை ஏற்படுத்த மோடிக்கு பணம் அனுப்பியதை டிரம்ப் கூற்று நிரூபிக்கிறது. சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன.

இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா என்று தற்போது கேள்வி எழுகிறது. மோடியை பாஜக பிரதமர் பிம்பமாக மாற்றியது, ஆம் ஆத்மியின் திடீர் வளர்ச்சி ஆகியவை சந்தேகமளிக்கிறது.
எந்தெந்த கட்சிகள், அமைப்புகள் இந்த நிதியை பெற்றன என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆர்எஸ்எஸ்- பாஜக வலையமைப்பு விநோதமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. USAID மூலம் கடந்த 2021 மற்றும் 2024 நிதியாண்டுகளில் 650 பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கான நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா மாதிரியான வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதன்பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கிறிஸ்டியன் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன், நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஞானசேகரன் தனி ஒரு ஆளாக வீடுகளில் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் வைத்தும் விற்றும் இருந்த நிலையில் அந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரனின் ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதுடன், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.






