search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rangasamy"

    • புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
    • கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.


    வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார்.

    அங்கு முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.

    தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
    • அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதிதோறும் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை. இலவச அரிசி கொடுங்கள் என எல்லா இடத்திலும் தாய்மார்கள் கேட்டுள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் அரசின் கொள்கை மாநில அந்தஸ்து புதுவைக்கு வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சியையும் எங்கள் அரசு எடுக்கும்.

    எங்கள் அரசின் செயல்பாடுகள் புதுவை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேர்தலுக்காக நாங்கள் புதிதாக எந்த வியூகமும் அமைக்க வேண்டியதில்லை. புதுவை அரசு சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுவை மாநிலத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம்.

    எனவேதான் பா.ஜனதா வேட்பாளருக்கு கூட்டணியில் தொகுதியை வழங்கினோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எனது ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.

    இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.

    அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,

    சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.

    மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
    • பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    சபையில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.

    தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, பேரவை முன் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    • நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ கட்சியை தொடங்கியுள்ளார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


    இதைத்தொடர்ந்து, திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு தலைமை செயலாளர் திருப்பி அனுப்புவதாக குற்றசாட்டு.
    • அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என புகார்கள் எழுந்து வந்தன. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகரை தேர்தல் துறை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜீவ் வர்மா விடுவித்தார்.

    இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவா-விற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • கார்னிவெல் விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
    • இதன் நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமி நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.


    இசை நிகழ்ச்சியில் "ஊம்... சொல்றியா...ஊகூம் சொல்றியா.. மற்றும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

    இசை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் ஆண்ட்ரியா சிக்கி திணறினார். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காரை துரத்தி சென்றனர். ஆண்ட்ரியா கார் பறந்து சென்றது.


    விழா முடிந்து இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்து சென்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது மக்கள் ரெயில்வே கேட்டை கடக்கும் போது சென்னை ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங்கில் கேட் இறக்கப்பட்டது. இதில் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கினார்கள். இதனால் மீண்டும் கேட் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, ரூ.500 ஏற்கனவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
    • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

    மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

    நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

    • கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
    • பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    ஆட்சி தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அரசு விழாக்களில் ஏற்கனவே சில முறை பகிரங்கமாக இதை தெரிவித்துள்ளார்.

    புதுவை சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் சட்டசபையிலேயே எச்சரிக்கையும் விடுத்தார்.

    சபை நடவடிக்கையில் அனைத்து அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதிகாரிகள் சபை நடவடிக்கையில் பங்கேற்கிறார்களா? என அமைச்சர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு என அடிக்கடி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறி வருகிறார். இதனிடையே நேற்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒரு கோப்புக்கு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க கடும் சிரமம் அடைய வேண்டியுள்ளது. இயக்குனர், செயலர், தலைமை செயலர் ஆகியோர் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தான் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்புக்கு தற்போதுதான் உயர் அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். இந்த வாரத்தில் அந்த கோப்புக்கு அனுமதி கிடைக்கும். இதன்பின்னர் 10 நாட்களில் லேப்டாப் வழங்கப்படும்.

    பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளது.

    அதை படித்து நிர்வாக பொறுப்புக்கு வர ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

    இதுவரை புதுவையை சேர்ந்த 5 பேர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர் என்றார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த ஆதங்கமான பேச்சு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடையே உள்ள பனிப்போரை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

    • சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டி
    • புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.

    புதுச்சேரி:

    என்ஆர்.காங்-பா.ஜனதா ஆட்சிக்கு இல்லை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கே ஆதரவு என்று சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டியளித்துள்ளார்.

    உருளை யன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

     கடந்த ஒரு வாரமாக புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.

    மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரும், தலைமை செயலா ளரும்தான் புதுவையை ஆட்சி செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடு க்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிதித்துறை செயலர் முதல்-அமைச்சருக்கு தெரியாமல் மாற்றப்பட்டுள்ளார்.

    என்.ஆர்.காங்கி ரஸ், பா.ஜனதா அரசுக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. ரங்கசாமிக்கே ஆதரவு, அவருக்கு மட்டுமே ஆதரவு. புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் இதுதொடர்பாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
    • கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.

    கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.

    இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-

    சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.

    ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

    விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.

    தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

    சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.

    அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.

    மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    ×