என் மலர்
புதுச்சேரி

தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி பால் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை- ரங்கசாமி அறிவிப்பு
- புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.
தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.
மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






