என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
    • ஏவுகணை பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது.

    இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சந்திபூரில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.

    ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் பெரிய இலக்கை நோக்கிச் சென்றது. பிறகு இதை ஏவிய விமானி சிறிய மறைக்கப்பட்ட இலக்கைத் தேர்ந்தெடுத்தார். எனினும், ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.

    பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஏவுகணையின் பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சத்தை நிரூபித்துள்ளன. மேலும் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாகத் தாக்கியுள்ளன.

    ஏவிய பிறகும், இலக்கை மாற்றும் வசதி கொண்ட இந்த ஏவுகணையில் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் உள்ளது. சோதனையில் இந்த ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது.


    • 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
    • யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடி இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர் கே.ஜே. யேசுதாஸ். இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களா மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார்.

    தமிழில் 'பொம்மை' என்னும் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், 'கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் இவரது பாடல் முதலில் வெளிவந்தது. 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

    இவர் பாடிய 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு', 'வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்', 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் யாரும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இவர் குரலில் உருவான 'அரிவராசனம்' எனும் பக்தி பாடல் கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சன்னிதானத்தின் நடை திறப்பு மற்றும் சன்னிதான நடை சாத்தும் நேரங்களில் பாடப்படுவது தனிப்பெரும் சிறப்பு பெற்றவை.

    இசை ரசிகர்களால் 'கந்தவர்க் குரலோன்' என அன்பாக அழைக்கப்படுகிறார் கே.ஜே.யேசுதாஸ். இந்த நிலையில், யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
    • அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம்.

    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.

    இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய குறை என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள்.

    உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?. இதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சினையைத் தீர்க்கும்.

    இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். 

    • அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களால் பொது போக்குவரத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவது மின்சார ரெயில்களே. அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    மின்சார ரெயில்களால் பெரும்பாலும் நன்மை அடையும் மக்களுக்கு சில சமயங்களில் அசவுகரியங்களும் ஏற்படுகிறது.

    அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    • நான்கு பேரின் உடல்களை ரெட் கிராஸிடம் ஒப்படைத்தது.
    • ஒப்பந்தத்தை மீறும் செயல் என தெரிவித்தது.

    இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதை ஒட்டி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளில் நான்கு பேரின் உடல்களை நேற்று ரெட் கிராஸிடம் ஒப்படைத்தது.

    ரெட் கிராஸிடம் ஹமாஸ் நான்கு பேரின் உடல்களை ஒப்படைத்ததை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். எகிப்து இடைத்தரகர்கள் உதவியோடு நான்கு பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேரை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    நான்கு பேரின் உடல்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ரெட் கிராஸ் வாகனம் ஏற்றிவந்தது. பாலஸ்தீனர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெய்துனியாவில் கூடினர். ரெட் கிராஸ் வாகனம் தங்களை நோக்கி வருவதை கண்ட அவர்கள் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் முறையை கண்டித்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஹமாஸ், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என தெரிவித்தது. 

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர்.
    • அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    நேற்று (புதன்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவம் சாப்பிட்டது தொடர்பாக இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்பான SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP (பாரதிய வித்யார்த்தி பரிஷத்) உறுப்பினர்கள் இடையே மொதலானது ஏற்பட்டது.

    மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர். மீறி நேற்று அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்ளை ஏபிவிபியின் அடித்ததாக SFI அமைப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த எஸ்எப்ஐயினருடன் ஏபிவிபியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக SFI வெளியிடுள்ள அறிக்கையில், ஏபிவிபி குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைத் தாக்கினர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, தெற்காசிய பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல் 3.45 மணியளவில் மைதான்கரி காவல் நிலையத்திற்கு மோதல் தொடர்பான அழைப்பு வந்தது. நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

    மோதல் தொடர்பாக SAU நிர்வாகம் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முறையான புகார் எதுவும் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தால் உள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்திருக்கிறது.
    • வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் என்ற கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தி.மு.க. பயப்படுகிறதா எனக்கேட்கின்ற ஓரு கூட்டத்தார் இன்று நேற்றல்ல, பெரியார் முன்னெடுத்த 1937-39 மொழிப் போராட்டத்தின் போதும் இருந்தனர். இதே கேள்வியை அப்போதும் கேட்டனர். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி.

    கீழடி அகழாய்வுகள் மூலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். மாங்குளம், மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருட்களை நவீன அறிவியல் தொழில் நுட்பமான கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தியதன் விளைவாக, தமிழர்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்திறன் பெற்றிருந்தனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒரு போதும் அழிக்க முடியாது.

    பிறகு எதற்காக அவற்றை நாம் எதிர்க்கிறோம்? அதற்கான காரணத்தைத் தந்தை பெரியார் அன்றே சொன்னார். "இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்" என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள்.

    அண்மையில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, "ஒரு மாநிலத்தைக் காக்க கைப்பற்ற வேண்டும் என்றால், அதன் கலாச்சாரத்தை கையில் எடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி" என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.

    தமிழர்களின் கலாச்சாரத்தை தனித்துவமானப் பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப்பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி தான் திராவிட இயக்கம்.

    தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு நுழைய நினைக்கும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை அன்று முதல் இன்று வரை தடுத்து விரட்டும் காவலர்களாகத் திராவிட இயக்கத்தினர் திகழ்கின்றனர். ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப் பெங்கும் காண முடியும்.

    இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. அண்மைக்காலமாகத்தான் மைத்திலி மொழி பேசும் மக்கள் மெல்ல விழிப்புணர்வு பெற்று, தாய்மொழியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல.

    வடமேற்கு உத்தரபிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்தரபிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தர பிரதேசத்தின் உள்பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது.

    உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகாண்டில் வாழும் மக்களின் பூர்வீக மொழி கடுவாலி மற்றும் குமோனி. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. போஜ் புரி, ஆவ்தி போன்ற மொழிகள் பெரும் அவதிகளுக்கிடையே இப்போதுதான் மெல்லத் துளிர்க்கின்றன.

    இவை மட்டுமா? ஹரி யாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், சத்திஸ்கர், அரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.

    வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம்தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

    இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.

    என்றும் தமிழைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகளும்கூட இந்தித் திணிப்பு கூடாது என்கின்றன.

    தமிழ் மண்ணிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத; தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையினரும் மட்டும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஆதரித்தபடியே, "இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்" என்று ஒரு 'தினுசாக'ப் பேசுகிறார்கள்.

    மும்மொழித்திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தமிழர்கள் வாழும் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தவிர வேறெங்கும் தமிழ் மொழி இடம் பெறவில்லை. இதுவும்கூட எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

    பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உருது ஆசிரியர்களுக்குப் பதில் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்கும் மொழிப் பாசிசம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போலத் தாய் மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.

    தேசிய கல்விக் கொள்கை 2020ன் 4.17வது பிரிவு, "இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

    அதுவும், சமஸ்கிருதத்துடன் கூடுதலாக தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்கு ஆன்லைன் முறையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே மத்திய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாகமும் மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி. அந்தந்த மாநில மொழிகளைக் கற்பதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலைக் கோரியதுடன், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் ஏதேனும் விவரம் உள்ளதா? என்றும் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களின் மாநில மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை. இவர்கள்தான் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தேசியக் கல்விக் கொள்கையின்மும்மொழித் திட்டம் மூலம் தமிழைக் கற்றுத் தரப் போகிறார்களாம். அதனால், தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டுமாம்.

    தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருதம், இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில்அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சட்டமாக்கினார் பேரறிஞர் அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட் டினால் தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளைய தலைமுறை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று சர்வ அமாவாசை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-15 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி காலை 9.01 மணி வரை

    பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: அவிட்டம் மாலை 4.07 மணி வரை

    பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திருவெண்காடு, திலதைப்பதி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று). சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். கோவை ஸ்ரீ கோணியம்மன் கிளி வாகன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-பரிசு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-வெற்றி

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- செலவு

    மகரம்-அமைதி

    கும்பம்-வரவு

    மீனம்-சாதனை

    • அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார்.
    • காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

    மகாராஷ்டிராவில் புனே நகர பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு செல்ல அந்த 26 பெண் காத்திருந்தபோது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    போலீசார் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:45 மணியளவில், சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பால்டானுக்குச் செல்லும் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது நபர் ஒருவர் பெண்ணிடம் வந்து பேச்சுக்கொடுத்துள்ளார். சதாராவுக்கான பேருந்து வேறொரு நிறுத்தத்தில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    பின்னர் அவர் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலியான ஏசி பேருந்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். பேருந்தின் உள்ளே விளக்குகள் எரியாததால் பேருந்தில் ஏற அந்த பெண் முதலில் தயங்கி உள்ளார். பேருந்தில் விளக்கு இல்லையே என அந்த பெண் கூற, அதற்கு அந்த நபர், மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார். 

    அப்பெண் உள்ளே செல்ல, பின்தொடர்ந்த அந்த நபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பேருந்து வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் (36 வயது) என்பதும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர்(டி.சி.பி.) ஸ்மார்த்தா பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்தப் பெண் பேருந்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் ஏராளமான மக்களும், ஏராளமான பேருந்துகளும் இருந்ததாக தெரிவித்தார்.

    சம்பவம் நடந்த உடனேயே அந்தப் பெண் காவல்துறையை அணுகவில்லை, பால்டானுக்கு ஒரு பேருந்தில் ஏறி, பயணத்தின் போது தொலைபேசியில் தனது தோழியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். தனது தோழியின் அறிவுரையின் பேரில், காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

    அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.சி.பி.ஸ்மார்த்தா பாட்டீல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக அரசுக்கு எதிராக சம்பவம் நடந்த பேருந்து நிலையத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் அடித்து நொருக்கிறனர்.

     மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, கோபத்தை ஏற்படுத்துகிறது.

    அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இதற்கு ஏற்புடையதாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையரை தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சாமி தரிசனம் செய்ய அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் (முதல் ஜாமம் பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரை-இரண்டாம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரை-மூன்றாம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை-நான்காம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை) 4 கால பூஜைகள் நடைபெறும்.

    பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்படும். விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


    மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவை பட்டீஸ்வர சாமி கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


    விடிய விடிய நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அனைத்துக் கோவில்களிலும் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 325 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்ட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோப்ரா ஆர்ச்சர் தகர்த்துள்ளார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் ஆடி 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது ஆர்ச்சர் 30 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வென்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் பெரிகார்டு உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    ×