என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
    • ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.

    தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.

    சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.

    திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
    • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

    ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டம் நடைபெற்றது.   இதில் ஜம்மு காஷ்மீரில்  குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

    ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானின் தலைவர்கள், அதிகாரிகள் அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

    இந்த கவுன்சிலின் நேரத்தை, சர்வதேச உதவிகளை நம்பி வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு தொடர்ந்து வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், அதன் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதன் திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

     

    இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள் ஆகும்.

    சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களை பாகிஸ்தான் தூண்டி வருகிறது. அதே நேரத்தில் அதன் சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டது.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

    கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமே அங்குள்ள நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.

    பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான அரசின் உறுதிப்பாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இந்த வெற்றிகள் ஒரு சான்றாகும். பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.

    ஒரு நாடாக, பாகிஸ்தான் மனித உரிமைகளை மீறுவதன் மூலமும், சிறுபான்மையினரை ஒடுக்குவதன் மூலமும், ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணிப்பதன் மூலமும் தனது கொள்கைகளைத் திணிக்கிறது.

    ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிக்கிறது. எனவே பாகிஸ்தான் யாருக்கும் உபதேசம் செய்யும் நிலையில் இல்லை என்று தெரிவித்தார். 

    • இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • ஆப்கானிஸ்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பல்வேறு சுவாரஸ்யங்களை வழங்கி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தொடர் தோல்விகளால் வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    எனினும், பி பிரிவில் எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழல் தான் நிலவுகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பி பிரிவின் முதல் இரு இடங்களில் உள்ளன. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

    பி பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மூன்று அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற போட்டியிடுகின்றன. இந்த பிரிவில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. பி பிரிவில் கடைசி இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு போட்டியிலும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் அவை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். மறுப்பக்கம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

    இப்படி சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கிலாந்து அணியின் வெற்றி மற்றும் நெட் ரன் ரேட் ஆகியவை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

    அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

    இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இந்த பிரிவில் மீதமுள்ள இரு போட்டிகள் முடிவில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணையுடன் அரையிறுதியில் மோதும்.

    ஒரு பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்து் பட்சத்தில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாலிவை எதிர்கொள்ளும். ஒருவேளை இந்திய அணி ஏ பிரிவில் 2-ம் இடம் பிடிக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும்.

    இதுதவிர்த்து ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை வீழ்த்தினால், அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாடும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாட வேண்டியிருக்கும்.

    • 1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன்.
    • நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பூமி சமுத்திரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:-

    1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.

    அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. இதை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

    அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆகுவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்வேன். புதுசு புதுசா வந்தவர்கள், இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள்.

    திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

    முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.

    இன்றைக்கு இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கட்சி பணியாற்றினால் கோட்டை சிறுத்தைகள் வசமாகும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்ப உறவினர்களை இங்கு பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் கதறி கண்ணீர் விட்டு என்னிடம் அழுதார்கள்.

    இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் ஆறுதல் கூறுவதற்கு வெறுங்கையோடு வரவில்லை. நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.

    எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த துயரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கெடுத்து ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், விலை குறைவதும், ஏறுவதுமாக விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400

    25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-02-2025- ஒரு கிராம் ரூ.106

    25-02-2025- ஒரு கிராம் ரூ.108

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார்.
    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களையுமே தனித்தே சந்தித்துள்ளார்.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்தை தாண்டி ஓட்டுகளை வாங்கியது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இது போன்ற சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். இப்படி கட்சி நிர்வாகிகள் விலகிச் செல்வது குறித்து கருத்து தெரிவித்த சீமான், கட்சியில் இருப்பதும் விலகி செல்வதும் அவரவர்களின் விருப்பம். இது நாம் தமிழர் கட்சிக்கு களையுதிர்காலம் என்று தெரிவித்தார்.

    இப்படி தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் விலகிச் சென்ற போதிலும் அதுபற்றி கவலைப்படாமல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு சீமான் தயாராகி வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் 2-ம் கட்ட சுற்று பயணத்தை அவர் தொடங்க இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும் போது, கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்களால் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைய போவதில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். அதற்கேற்ப கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.



    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார். ஏற்கனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் சார்பில் தனித் தனியாக கூட்டணி அமைந்துள்ளது. இளைஞர்களின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக அளவில் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
    • குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பரேலியில் நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வந்தார். குடிபோதையில் இருந்த ரவீந்தனர்குமார் மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.

    இதனால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரவீந்தரகுமாரின் செயலால் கோபமடைந்த ராதா, அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். சமதானப்படுத்த முயன்றும் குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    இதன் பின்னர் தகராறு அதிகரித்து இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

    மணமகன் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மணமகளின் தந்தை திருமணத்திற்கு முன்பு ரூ.2.5 லட்சமும், திருமண நாளில் ரூ.2 லட்சமும் வரதட்சணை கொடுத்துள்ளார். எனவே மணமகன் ரவீந்திரகுமார் உட்படகுடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது

     குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

    • ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
    • ஏவுகணை பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது.

    இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சந்திபூரில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.

    ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் பெரிய இலக்கை நோக்கிச் சென்றது. பிறகு இதை ஏவிய விமானி சிறிய மறைக்கப்பட்ட இலக்கைத் தேர்ந்தெடுத்தார். எனினும், ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.

    பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஏவுகணையின் பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சத்தை நிரூபித்துள்ளன. மேலும் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாகத் தாக்கியுள்ளன.

    ஏவிய பிறகும், இலக்கை மாற்றும் வசதி கொண்ட இந்த ஏவுகணையில் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் உள்ளது. சோதனையில் இந்த ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது.


    • 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
    • யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடி இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர் கே.ஜே. யேசுதாஸ். இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களா மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார்.

    தமிழில் 'பொம்மை' என்னும் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், 'கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் இவரது பாடல் முதலில் வெளிவந்தது. 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

    இவர் பாடிய 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு', 'வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்', 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் யாரும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இவர் குரலில் உருவான 'அரிவராசனம்' எனும் பக்தி பாடல் கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சன்னிதானத்தின் நடை திறப்பு மற்றும் சன்னிதான நடை சாத்தும் நேரங்களில் பாடப்படுவது தனிப்பெரும் சிறப்பு பெற்றவை.

    இசை ரசிகர்களால் 'கந்தவர்க் குரலோன்' என அன்பாக அழைக்கப்படுகிறார் கே.ஜே.யேசுதாஸ். இந்த நிலையில், யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
    • அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம்.

    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.

    இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய குறை என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள்.

    உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?. இதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சினையைத் தீர்க்கும்.

    இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். 

    ×