என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் சீமான்
    X

    சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் சீமான்

    • தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார்.
    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களையுமே தனித்தே சந்தித்துள்ளார்.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்தை தாண்டி ஓட்டுகளை வாங்கியது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இது போன்ற சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். இப்படி கட்சி நிர்வாகிகள் விலகிச் செல்வது குறித்து கருத்து தெரிவித்த சீமான், கட்சியில் இருப்பதும் விலகி செல்வதும் அவரவர்களின் விருப்பம். இது நாம் தமிழர் கட்சிக்கு களையுதிர்காலம் என்று தெரிவித்தார்.

    இப்படி தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் விலகிச் சென்ற போதிலும் அதுபற்றி கவலைப்படாமல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு சீமான் தயாராகி வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் 2-ம் கட்ட சுற்று பயணத்தை அவர் தொடங்க இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும் போது, கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்களால் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைய போவதில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். அதற்கேற்ப கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.



    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார். ஏற்கனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் சார்பில் தனித் தனியாக கூட்டணி அமைந்துள்ளது. இளைஞர்களின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக அளவில் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×