என் மலர்
தலைப்புச்செய்திகள்
- லாஸ்லியா மற்றும் யூடியூப் பிரபலமான ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'.
- கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் 'சுழல் 2'.
திரையரங்கிள் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி-யில் என்னென்ன திரைப்படங்களும் சீரிஸ்களும்
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா மற்றும் யூடியூப் பிரபலமான ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'. கடந்த 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'சுழல் 2'
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் 'சுழல் 2'. மேலும் நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப் தொடர்அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இத்தொடர் புஷ்கர் - காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ளனர்.
'பிளட் அண்ட் பிளாக்'
குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் பிளட் அண்ட் பிளாக் . இப்படத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த படத்தை ப்ளூ வேல் என்டர்டெயின்மென்ட்ஸ் பதாகையின் கீழ் ஹரி கிருஷ்ணன் வாசுதேவன் தயாரித்துள்ளார். இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பராரி'
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளார். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'சங்கராந்திகி வஸ்துன்னம்'
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இதில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'ஆபரேஷன் ராவன்'
வெங்கட சத்யா எழுதி இயக்கிய திரில்லர் திரைப்படம் 'ஆப்ரேஷன் ராவன்'. இப்படத்தில் ரக்ஷித் அட்லூரி மற்றும் சங்கீர்த்தன விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு சைக்கோ கொலையாளியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
- அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை.
அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.
அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் முதலே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் முதல் ஓவரிலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சத்ரானுடன் செடிகுல்லா அடல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 12, ஹஷ்மதுல்லா ஷாஹிதி 20 என வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா அடல் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து நபி 1, நைப் 4 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து ரஷித் கான், ஓமர்சாய் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ரஷித் கான் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஓமர்சாய் அரை சதம் கடந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
- காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் இமாச்சலப் பிரதேச அரசு , சில நலத்திட்டங்களுக்கு நிதியளிக்க கோவில் அறக்கட்டளைகளின் உதவியை நாடியுள்ளது . காங்கிரஸ் அரசின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், "கடந்த கால எந்த அரசாங்கமும் பட்ஜெட் திட்டங்களுக்கு கோவில் அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்தியதில்லை. வழக்கமான அரசு செலவுகளுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள், மறுபுறம், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கொள்கைகளுக்கு நிதியளிக்க கோவில் நன்கொடைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கோவில் கமிட்டி, பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.
- சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம்.
- சம்மனை ஒட்டிச் சென்ற பின்னர் அதை படம் எடுத்து பூஜை அறையிலா வைக்க முடியும் ?
சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராவதற்காக சென்னை வந்துள்ள சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தனது வீட்டில் சம்மனை ஒட்டியது, அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை குறிிப்பிட்டு சீமான் பேசினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம்.
இன்று மாலை ஆஜராவதாகக் கூறினேன். காவல்துறையினர் தான் இரவு 8 மணிக்கு வருமறு கூறினர். எனக்கான சம்மன் குறித்த தகவல் எனக்கு தெரிந்தால் போதும், மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
சம்மனை ஒட்டிச் சென்ற பின்னர் அதை படம் எடுத்து பூஜை அறையிலா வைக்க முடியும் ?
கோழைகள் தான் பெண்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்வர், வீரர்கள் நேருக்கு நேர் நிற்பர். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவ்விவகாரம் வருகிறது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற அநாகரீகம் இல்லை.
நான் கருத்து கூறுகிறேன் என்றால் எனக்கு பதில் கூறுங்கள். திமுகவில் உள்ள பேச்சாளர்களை வைத்து நேருக்கு நேர் பேசுங்கள். திமுகவில் பேச்சாளர்கள் இல்லை என்றால் வாயை வாடகைக்கு விடும் சிலரை வைத்தாவது பதில் கூறுங்கள்.
15 ஆண்டாக ஒரு பெண்ணை வைத்து என்னை, என் குடும்பத்தை வன்கொடுமை செய்கிறீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ரங்கம்மா பாடல் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான போய் வாடி பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடல் பாரதிராஜாவிற்கும் வடிவுகரசிக்கும் இடையே உள்ள சோக காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை தாவூத் வரிகளில் அனந்து பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.
- பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.
இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய அமித் குமார் ஜா (27) என்பவரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்தனர்.
அமித் குமார் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
- மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி உத்தரவின் பேரில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது.
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு கருச்சிதைவும் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில், வேலூரில் ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பணி பெண்ணை தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியை தள்ளிவிட்ட சம்பவத்தில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் உள்ள ஹேமராஜ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி உத்தரவின் பேரில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
- ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.
- 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் என இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023-2024 நிதியாண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25 நிதியாண்டில் அதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு மற்றும் சுரங்கத்துறையின் மோசமான செயல்பாடு இந்த குறைவுக்கு காரணம் ஆகும்.
2024-2025-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதலில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்டமாக 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் முதலில் 8.2 சதவீதமாக இருக்கும் நிலையில், பின்னர் 9.2 சதவீதம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்தது குறிப்பிடத்தக்கது.
- மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கின் அளவை 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
- இந்த முடிவால் மத்திய அரசுக்கு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக கிடைக்கும்.
மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று 16-ஆம் நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ""மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன; நிதி ஒதுக்கீட்டை 41%லிருந்து 40%ஆக பரிந்துரைக்க முடிவெடுத்து இருப்பதை ஏற்க முடியாது.
50% நிதிப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. பல மாநிலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஏன்னு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
- கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
- நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
பணியாளர்கள் உணர்ந்ததுபோல் இது உண்மையாகவே நில அதிர்வா? அல்லது வதந்தியா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும், ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் அதிர்வு வருவது வழக்கம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
- சென்செக்ஸின் 30 நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் உயர்வை சந்தித்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.
நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. இன்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது.
இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் இன்று 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது.
சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.






