என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.
    • 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் என இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2023-2024 நிதியாண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25 நிதியாண்டில் அதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு மற்றும் சுரங்கத்துறையின் மோசமான செயல்பாடு இந்த குறைவுக்கு காரணம் ஆகும்.

    2024-2025-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    முதலில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்டமாக 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    2023-24 நிதியாண்டில் முதலில் 8.2 சதவீதமாக இருக்கும் நிலையில், பின்னர் 9.2 சதவீதம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கின் அளவை 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
    • இந்த முடிவால் மத்திய அரசுக்கு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக கிடைக்கும்.

    மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று 16-ஆம் நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ""மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன; நிதி ஒதுக்கீட்டை 41%லிருந்து 40%ஆக பரிந்துரைக்க முடிவெடுத்து இருப்பதை ஏற்க முடியாது.

    50% நிதிப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. பல மாநிலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஏன்னு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

    • கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
    • நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

    பணியாளர்கள் உணர்ந்ததுபோல் இது உண்மையாகவே நில அதிர்வா? அல்லது வதந்தியா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இருப்பினும், ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் அதிர்வு வருவது வழக்கம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
    • சென்செக்ஸின் 30 நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் உயர்வை சந்தித்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.

    நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. இன்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது.

    இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 9  லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் இன்று 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது.

    சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    • ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
    • ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

    'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படம் உருவான விதத்தை படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.
    • சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து, சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.

    இதனையடுத்து, சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளர் மற்றும் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.

    அப்போது சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.

    இந்நிலையில், சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

    2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது; இதில் வரும் 3 தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைப்பு.
    • சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.

    சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.

    பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இந்நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசியுள்ளார்.

    16 வயது சிறுவனின் முகத்தில் சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

    • கொரோனா காலத்தில் மத்திய அரச வழங்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை.
    • மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதலாக 119 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முதல் சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

    சிஏஜி அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்துவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

    அதன்படி டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று மருத்துவ கட்டமைப்புகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய 21 மொஹல்லா கிளினிக்குகளில் கழிப்பறைகள் இல்லை. கொரோனா தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்காலத்தில் மத்திய அரசு டெல்லி மாநிலத்திற்கு 787.91 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. அதில் 582.84 கோடி ரூபாய் மட்டுமே ஆம் ஆத்மி அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத தொகையில் மனித வளங்களுக்கான ரூ.30.52 கோடியும் அடங்கும். மனித வளம் என்பது பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்தல் என்பதைக் குறிக்கிறது.

    கூடுதலாக 119.95 கோடி ரூபாய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (PPE போன்ற பாதுகாப்பு உபகரணங்கள்) வாங்குவதற்காக வழங்கப்பட்டது. அதில் 83.14 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் படுக்கையை அதிகரிக்க பட்ஜெட்டை சரியாக பயன்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016/17 முதல் 2020/21 பட்ஜெட்டில் 32 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 1357 படுக்கைகள் மடடுமே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    மொஹல்லா மருத்துவமனையில் 21-ல் பாத்ரூம் இல்லை. 15 கிளினிக்குகளில் மின்சார பேக்-அப் இல்லை. 12-ல் மாற்றுத்திறனாளிக்கு உகந்த வகையில் அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

    • ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
    • சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஹையோடி பாடல் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்பாடலை கிருத்திகா நெல்சன் வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட முக்கிய அறிவிப்புகளை நேற்று அறிவித்திருந்தேன்.
    • மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டனர்.

    "மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, "உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்" என நேற்று அறிவித்தேன்!

    இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சை தற்போது வரை நீடிக்கிறது.
    • பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது

    பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    முன்னதாக 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம், "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.
    • பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர். எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×