என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
- திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
தமிழக வெற்றிக்கழகம் பெயரை கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா என தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக்க ழகத்தின் ஆதரவாளர்களாக சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலைய செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே அதிகாரப் பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிறமொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
- ரசிகர் கேள்விக்கு ஜோதிகா பதில் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்திலும் நடித்து இருந்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். அதன்பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
நடிகை ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சூர்யா - ஜோதிகா குடும்பத்தார் மும்பையில் குடியேறியுள்ளனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யா கொடுத்ததில் சிறந்த பரிசு என்ன என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா அவரே பரிசு தான் என்று கூறியுள்ளார். இவரது பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி அணி புளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
- மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது. 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூரில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன.
நாளை முதல் லக்னோவில் போட்டிகள் ஆரம்பமாகின்றன. நாளை (மார்ச் 3-ம் தேதி) லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறி விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணியும் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 2 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
- திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான்.
- விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் என்னிடம் உள்ளது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் சீமான் பேசுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என்று தி.மு.க. எம்பி கனிமொழி கூறி இருப்பது தொடர்பாகவும், பாலியல் வழக்கு குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கனிமொழி கூறியுள்ள கருத்துக்கள் என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் தொடங்கி பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வரை கனிமொழி இதுவரை கருத்துக்களை தெரிவிக்காதது ஏன்?
இதுபோன்ற சூழலில் என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்.
வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.
என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 'என்ஜாய் மென்ட் 'வித் அவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி' என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.
அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்? இதற்கு கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு இரண்டு மூன்று சீட்டுகளுக்காக எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுக்கா மல் மவுனம் சாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது. இந்த நாட்டுக்கு அது தேவையான கட்சி தானா? திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான். தமிழகத்தில் திராவிட கூட்டத்தை தவிர வேறு யாரும் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே என்னை குறி வைத்துள்ளனர்.
கூட்டணியில் இருப்பதால் மயிலிறகையும் மல்லிகை பூவையும் வைத்துக் கொண்டு வருடி விடும் வேலையைத்தான் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. கூட்டணியில் இருப்பதால் மீனவர் பிரச்சனைக்கும் ஆசிரியர்கள் பிரச்சனை என எந்த பிரச்சினையும் அவர்கள் குரல் கொடுப்பதே இல்லை.
மும்மொழி கொள்கையில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாயில் புண் இருக்கிறதா? இல்லை புற்று பாதித்துள்ளதா? இப்படி இருந்து கொண்டு என்னை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டார்கள் என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்னையும் சவுமியா அன்புமணியையும் குஷ்புவையும் முன்கூட்டியே கைது செய்தனர்.
அரசின் தவறை தட்டி கேட்கும் போராட்டம் அது என்பதாலேயே அதற்கு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கனிம வளங்கள் உள்ளே போவதை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி இயற்கை வளங்களை காக்க முடியாத அரசாகவே இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
- தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
- மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி தனியார் மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
அமைச்சர் சேகர்பாபு என்னை கர்நாடகா டூப் போலீஸ் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர். வேண்டுமென்றால் அமைச்சர், நான் வேலை பார்த்தது தொடர்பாக சோதனை செய்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது பொழுது விடிந்தால் போதும் பா.ஜ.க.வினரை விமர்சிப்பதே தி.மு.க.வினரின் தொழிலாக உள்ளது.
தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு தான் செல்கிறோம் என தெரிந்து செல்வோம். ஆனால் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என தெரியாமல் அதில் எப்படி கலந்து கொள்வது? எந்த விதத்திலும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதி எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட விதண்டா வாதமாக பேசி வருவது அவர்களின் வாடிக்கை. அப்படி இருக்க அந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொள்வது?
திராவிட மாடலை அகற்றும் வரை காலில் செருப்பு அணியப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளேன். செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம் என்பது காலில் செருப்பு போடாமல் நடக்கலாம் அதில் தவறில்லை, ஜெயிலுக்கு தான் போகக்கூடாது.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையே இரு மொழிக் கொள்கையில்தான் படித்ததாக கூறியுள்ளார். நான் மும்மொழி கொள்கையில் தான் படித்தேன். விருப்பமொழியாக தமிழை தேர்வு செய்தேன். படிக்காத நபர்களுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
- தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
சென்னை :
இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.
- நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
- 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வெளியேறின.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக ஹாட் ரிக் வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டி விராட் கோலியின் 300-வது ஒரு நாள் போட்டி ஆகும். 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலி இணைகிறார்.
36 வயதான விராட் கோலி 299 போட்டியில் 287 இன்னிங்சில் 14,085 ரன் எடுத்துள்ளார். இவரது சராசரி 58.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 93.41 ஆகும். இதில் 51 சதமும், 73 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் அவர் தனது 51-வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தார். கோலி தனது 300-வது போட்டியில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விராட் கோலியின் 300-வது போட்டியை பார்ப்பதற்காக அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா துபாய் சென்றுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்களுக்கு குடும்பத்தினரை அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
- இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ள நிலையில் நடிகர் விஜய் தனித்து போட்டியிட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ள அவர் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
பூத் கமிட்டிகளை வலுவாக்கி அதன் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலுமே கட்சியின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கு விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல பெண் பிரமுகரும் தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோன்று அ.தி.மு.க. வில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் த.வெ.க.வில் சேருவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விரைவில் விஜய் கட்சியில் சேருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இது போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவில் பணிபுரிந்து வருபவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இப்படி மாநிலம் முழுவதிலுமே இருந்து பல்லாயிரக்கணக்கானோர் விஜய் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருவதால் அதனை பிரம்மாண்டமான விழாவாக நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுவான ஒரு இடத்தில் வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் இணைப்பு விழாவை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான தேதி மற்றும் விழா நடைபெறும் இடங்கள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதன்மூலம் சட்டமன்ற தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது.
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார். ரஷியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரத்தில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.
அப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்தை தெரிவித்தபோது டிரம்ப் குறுக்கிட்டு அவரை கண்டித்தார். மேலும் வான்சும் கண்டிக்கும் வகையில் பேசினார்.
ரஷியாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.
சர்வதேச ஊடகங்கள் மத்தியில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதம், போரின் திசையை மாற்றி விடும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதற்கிடையே உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவினாலும் அமெரிக்காவை போல் ஆயுதங்களை வழங்க முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து உள்ளது. டிரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நான் கூறியுள்ளேன். டிரம்ப் இதுவரை உக்ரைனுக்குச் செய்த உதவியை ஜெலன்ஸ்கி உண்மையில் மதிக்க வேண்டும்.
டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பில் நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. உக்ரைன் ரஷியாவுடன் அமைதியைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை நான் அறிவேன் என்றார்.
அதேபோல் இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் இன்று ஐரோப்பிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.
இதன்மூலம் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தைப் பெற ஐரோப்பிய தலைவர்கள், உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதும் தெரிவித்து இருந்தார். இதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கியுடன் மோதலால் இந்த போரின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.
- வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?
- தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன?
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* என்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறுவீர்கள்?
* என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
* வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?
* என்னை குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தலைமை பண்புடன் நடந்து கொள்ளட்டும்.
* தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
- உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க. தலையிடவில்லை
* உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் எதுவும் இல்லை என்றார்.






