என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.
அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.
அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
- ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.
அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.
அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.
பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.
அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
- காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கத்தால் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா பகுதியில் அபு கத்தால் இருந்தபோது அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அபு கத்தால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர்களில் ஒருவராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். மேலும் அவரை லஷ்கரின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக நியமித்தார். ஹஃபீஸ் சயீத்தின் உத்தரவுகளை பெற்று அபு கத்தால் காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதலுக்கு அபு கத்தால் தலைமை தாங்கியுள்ளார். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.
2023-ம் ஆண்டு ரஜோரியின் தங்ரி கிராமத்தில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் அபு கத்தால் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதில் அபு கத்தால் உள்பட 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஆள் சேர்ப்பு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்றும் காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கத்தால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
- சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
- வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ், திரை உலகில் பிரபல கதாநாயகியான நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன்-2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா நடிப்பை விட குடும்பத்திற்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வரும் நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது பல வருட கனவு. அந்த கனவு ஒரு வழியாக சில வருடங்களுக்கு முன்பு நிறைவேறி இருக்கிறது.

பெரும் தொகை கொடுத்து போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டை நயன்தாரா இடித்து விட்டு தனது கனவுபடி அங்குலம் அங்குலமாக அழகாக வடிவமைத்து ரசித்து கட்டி இருக்கிறார். 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் பழங்கால பொருட்கள், தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்போடு வீட்டை உருவாக்கி இருக்கின்றனர்.
முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2-வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை கவரும் கனவு இல்லமாக கட்டி இருக்கிறார் நயன்தாரா.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
- தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரெயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
- தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
- தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.
தென்னக தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள 493 லோகோ பைலட் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு வருகின்ற 19.03.25 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதற்கட்டத் தேர்வுக்கு அருகாமையிலேயே தேர்வு மையங்களை அமைத்துக்கொடுத்த தேர்வாணையம் இரண்டாம் கட்ட தேர்விற்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது.
தேர்வு மையம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்?
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோதும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு மற்றும் தற்போதும் தேர்வு மையங்கள் வேற்று மாநிலத்தில் அமைக்கப்படுவதை வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறை இரண்டாம் கட்டத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
- தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பக்கத்து வீட்டில் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் 64 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள மான்கிசர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது வீட்டில் தீபு கேவத் என்பவர் அதிக ஒலியில் பாட்டு போட்டுள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்துக்கு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சங்கர் கேவத் தனது குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரதமடைந்த தீபுவும் அவரது ஐந்து உறவினர்களும் சங்கர், அவரது தந்தை முன்னா கேவத் (64 வயது) மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் தந்தை முன்னா கேவத் படுகாயமடைந்தார்.
தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முன்னா கேவத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைறைவாகினர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கன்னடா திரையுலகின் முன்னணி இயக்குநராக இருக்கும் சந்தோஷ் குமார் தமிழில் அறிமுகமாகிறார். தமிழ் மொழியில் இவர் இயக்கும் படத்திற்கு "யுவன் ராபின் ஹூட்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். முன்னதாக இவர் கேம்பஸ் கிராண்டி, ஸ்டூடண்ட்ஸ், பிருந்தாஸ் கூக்லி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இயக்கும் யுவன் ராபின் ஹூட் படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் குமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்திற்கு மார்டின் கிளமண்ட் இசையமைக்கிறார். மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இம்மாதம் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. நேரடி தமிழ்ப் படமாக உருவாகும் இப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகளாவிய இந்த கிரிக்கெட் ‘லீக்’ போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
- ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் 'லீக்' சவுதி அரேபியா திட்டம்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.
ஐ.பி.எல். போலவே ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டியும் புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்க லீக் உள்ளிட்ட பல போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாடு ரூ.4347 கோடியை முதலீடு செய்ய தயாராக உள்ளது. கால்பந்து, பார்முலா 1 கார் பந்தயத்தில் சவுதி அரேபியா முதலீடு செய்து இருந்தது. தற்போது பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் லீக் போட்டியையும் நடத்த முடிவு செய்து உள்ளது.
உலகளாவிய இந்த கிரிக்கெட் 'லீக்' போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. டென்னிஸ் கிராண்ட்சிலாம் போன்று இதை நடத்த திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தொடர்ந்து பேசி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.






