என் மலர்
தலைப்புச்செய்திகள்
- துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார்.
கன்னட நடிகையான ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த கோணத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு தங்கம் வாங்கிய போது, ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் ரூ.1.70 கோடியை பெற்று விட்டு, தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்திருந்தார். இந்த ரூ.1.70 கோடியை ஹவாலா மூலமாக துபாய்க்கு ரன்யா ராவ் கொண்டு சென்றிருந்ததாக நடிகர் தருண் ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டும் இன்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.
அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்கு வந்திருப்பதும், அது உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ. மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
இதனால் கூடிய விரைவில் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
- "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மகாராஷ்டிரா அரசியலில் மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மகன் சத்ரபதி சாம்பாஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சாவா" என்ற திரைப்படம் வெளியானது முதல் ஓரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து ஔரங்கசீப் கல்லறை அமைந்துள்ள சாம்பாஜி நகர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மேலும், இது தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதையடுத்து இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்தது. இதனால் அவர்கள் மகால், கோட்வாலி, கணேஷ்பேத் மற்றும் சித்னாவிஸ் பூங்கா என பல்வேறு பகுதிளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமுற்றனர். இந்த மோதல் நாக்பூரின் ஹன்சாபூரி பகுதியிலும் பரவியது.
அடையாளம் தெரியாத நபர்கள் கடைகளை அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், இந்த பகுதியிலும் கல்வீசி தாக்குதல் நடந்தது. நாக்பூர் முழுக்க மோதல்கள் அரங்கேறி வருகிறது.
வன்முறையை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். வன்முறையை தொடர்ந்து காவல் துறையினர் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் காரணமாக வன்முறை நடந்த பகுதிகளில் அதிகாரிகள் சிசிடிவி வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
- விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
- சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர்.
வாஷிங்டன்:
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.
இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.
க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
- வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
- வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும்.
சென்னை:
வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும்.
இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-4 (செவ்வாய்க் கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி இரவு 8.40 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: சுவாதி மாலை 4.32 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் லட்ச தீபக்காட்சி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா. திருவாரூர் தியாகேசர் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகேபால சுவாமி உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காரைக்கால் அம்மையார் குரு பூஜை. ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநா யகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன் றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-ஆசை
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-இரக்கம்
கன்னி-கண்ணியம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- உண்மை
மகரம்-சாந்தம்
கும்பம்-பரிசு
மீனம்-நலம்
- அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
- ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
- விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ரூ.8½ கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உள்ளாடையில் மறைத்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தங்கத்தை வாங்க வந்த மேலும் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல இன்னொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமான கழிவறை குப்பை தொட்டியில் இருந்து அதிகாரிகள் 2 கருப்பு நிற பையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 3.1 கிலோ தங்கத்தை மீட்டனர்.
தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
- பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
மும்பை:
மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.
- கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யாண் கோவிந்த்வாடி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பஜார்பேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நடமாடியதை கவனித்தனர்.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த சகில் சேக் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை போட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை விற்க கல்யாணுக்கு வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்காசி மற்றும் திருநெல்வேலி மலைத்தொடர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மலைத்தொடர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
- ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.
மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டம்தான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.
தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கேள்வி: 2026-ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தே.மு.தி.க.வின் இந்த பட்ஜெட் பாராட்டை எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது?
பதில்: அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப் பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
- முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
- இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.
4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.






