என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
- லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.
அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். காதல், நட்பு, உறவு, குடும்பம், இசை என குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து விஷயமும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிப்பு, திரைக்கதை, காமெடி காட்சிகள், ஒளிப்பதிவு முக்கியமாக இசை என ரசிகர்கள் அனைத்தையும் ரசித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூலாக பரம் சுந்தரி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 7.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சையரா படத்தை தொடர்ந்து பாலிவுட்டிற்கு பரம் சுந்தரி திரைப்படமும் வெற்றி திரைப்படமாக உருவாக இருக்கிறது.
- தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்.
- எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
"அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றி வந்துள்ளது. கழகத்தை தோற்றுவித்து தொடர் வெற்றிகளைப் பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தமிழ் மண்ணில், மக்களுக்கான மகத்தான நல்லாட்சியை நடத்தியவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு மாற்றார் பலரும் இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கமே இருக்காது. அது சிதறுண்டு விடும் என கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில், இதோ தாயாக நான் இருக்கிறேன்.
கழகத்தையும் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பேன் என சூளுரைத்து, விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
இவற்றிற்கெல்லாம் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "ஆண்டுகளை கடந்தும் அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நின்று நிலைத்திருக்கும், அண்ணாவின் உருவம் பொறிந்த கொடி என்றும், எங்கும், எப்பொழுதும் பட்டொளி வீசி பறக்கும்" என்று புரட்சித்தலைவர் கூறினார். "இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும்" என்று தம் புரட்சித்தலைவி சட்டப்பேரவையிலேயே குளுரைத்தார்.
ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏலனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட, அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம்.
கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மனமாச்சர்யங்களை மறந்து, கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம் கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் எதிர்காலம் முக்கியம் கட்சியின் வெற்றி முக்கியம் அந்த வெற்றி தி.மு.க. என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.
எந்த தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவரும். புரட்சித்தலைவியும் பாடுபட்டார்களோ, அந்த தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. நான் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து அதன்படி செயல்படுகிறேன். எனக்கு நம் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. நான் இதைவிட கடினமான சூழ்நிலைகளையெல்லாம் எனது சிறு வயதிலேயே கடந்து வந்துவிட்டேன். நம் இருபெரும் தலைவர்களிடம் நான் பெற்ற பயிற்சி என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது.
கழகத்தின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜி.ஆரின் அணுகுமுறை எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களில் ஒருத்தியாக உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். கட்சியின் நலன் கருதியும். தமிழக மக்களின் நலன் கருதியும் தான் இதுநாள் வரை ஒவ்வொரு முடிவுகளையும் நாள் மேற்கொண்டு இருக்கிறேன்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட கழகம் வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன் ஆனால் கழகம் வெற்றியை பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் கழகம் இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஆனால், இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும். மேலும், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகிவிடும். எனவே "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இவி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். தம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் அது ஈடேற்றிடும்.
இது தொண்டர்களின் இயக்கம், தொண்டர்களின் முடிவே இறுதியானது, உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.
"ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.
ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும் கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
- உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 27-ந்தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா நிறுத்தி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய நிலக்கடலையில் அதிக அளவு "அஃபிளாடாக்ஸின்" என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதிப்பதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. அஃபிளாடாக்ஸின் B1 என்பது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஒரு முக்கிய ரசாயனம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஏழு நாட்களுக்குப் பிறகு (செப்டம்பர் 3) அமலுக்கு வரும் என்று இந்தோனேசிய தனிமைப்படுத்தல் ஆணையம் (IQA) தெரிவித்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், ஏற்றுமதிகள் இந்தோனேசியாவிற்குள் நுழையும்போது ஆய்வு மற்றும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேடிவ் காலனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் 25 ஆயிரம் ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதனை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.
இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 9 நாட்களில், அங்கு போலீசாரின் அடக்குமுறை இல்லை.
இவ்வாறு பேசினார்.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
- 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார்.
- கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்காக கோவையில் கடந்த மாதம் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் இதுவரை 3 கட்டங்களாக பிரசாரம் செய்து உள்ளார். 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாளில் (1-ந்தேதி) இருந்து 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரம் 13-ந்தேதி கோவையில் முடிவடைகிறது.
இப்படி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டார். இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடித்திருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
- இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இந்தியா- ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானுக்கு பயிற்சி பெற அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஆய்வில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த விண்வெளி திட்டம் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று இரவு ஜப்பான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் 2-வது நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கி ணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
சென்டாய் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உலக புகழ் பெற்ற புல்லட் ரெயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. அந்த பயிற்சி மையத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான பயிற்சியை இந்தியர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அதன் பிறகு மற்ெறாரு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய உணவு விருந்து அளித்தார். அத்துடன் பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் மற்றும் அதிகாரிகளிடம் விடை பெற்ற பிரதமர் மோடி இன்று பிற்பகல் டோக்கியோவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளாா்.
2018-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக் கிடையே, சீன அதிபா் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சீனாவில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவுடனான பல்வேறு ஒத்துழைப்பு விஷயங்கள் விசயமாக பேச உள்ளார்.
பிரதமர் மோடி சீனா பிரதமரை 2 தடவை சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவைக் குறி வைத்து வரி விதித்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரி வித்த சீனா, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. எல்லை விவகாரத்திலும் இந்தியாவுடன் இணக்கமான பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான சந்திப்பு மிகுந்த முக்கியத்து வம் பெற்றுள்ளது.
ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ் தான், கிர்கிஸ்தான், தஜி கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்க ளாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.
அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைக ளால் பல நாடுகளில் பதற் றம் நிலவுகிறது. இது தவிர உக்ரைன்-ரஷியா போர், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் ஆகியவையும் தொடர்ந்து தீவிரமாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் முக்கிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் அமெ ரிக்கா உள்பட பல நாடு களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.
- மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
- அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.
திருவனந்தபுரம்:
கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடந்துசெல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியில் அச்சமின்றி சென்றுவர முடியாத நிலை தற்போது உள்ளது.
தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தெருநாய் கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் தெரு நாய்களை விரட்டும் மந்திரக்கோல் ஒன்றை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதற்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிக்கோடு. இங்குள்ள வடசேரி என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர்.
இந்த மாணவர்கள் தான் தெருநாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் பொருத்தப்பட்ட மந்திரக்கோலை தயாரித்துள்ளனர். இதில் உள்ள சுவிட்சை அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விரும்பமில்லாத மீயொலி ஒலி மற்றும் ஒருவித வாசனை வெளியாகும்.
மேலும் லேசான அதிர்வலைகளையும் வெளியிடும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திரக்கோல் வைத்திருக்கும் நபரின் அருகில் செல்லாமல் அங்கிருந்து ஓடிவிடும். மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
மேலும் அதிலிருந்து வெளியாகும் வாசனையும் மனிதர்களால் உணர முடியாது. இதனால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. மேலும் பாதிக்கவும் செய்யாது.
தெருநாய்களை விரட்டும் மந்திரக்கோலை அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்லியில் நடைபெற்ற புதுமை மாரத்தான் என்ற நிகழ்வில் பரிசு கிடைத்துள்ளது.
இதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தேசியஅளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டுவரும் வகையில் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
தங்களின் கண்டு பிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் அதனை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபட்டு வருகின்றனர்.
- 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென் காவை தோற்கடித்தார்.
- சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த 32-வது வரிசையில் உள்ள லுசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரமே தேவைப்பட்டது.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியை எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-4, 6-7 ( 4-7 ),6-2 ,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 50 நிமிட நேரம் தேவைப்பட்டது.
6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன், பிரான்சிஸ்தியபோ (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பிய னும், முதல் நிலை வீராங்க னையுமான சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் கனடா வை சேர்ந்த லெய்லா பெர்னாண்டசை சந்தித்தார். இதில் சப லென்கா 6-3, 7-6 (7-2 ) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), புக்சா (ஸ்பெ யின்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
7-வது வரிசையில் இருக்கும் ஜாஸ்மின் பயோ லினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை எம்மா நவரோவா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
- இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன்.
- ஜாய்கிரிசில்டா திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் அவரது புகார் மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய்கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் அளித்துள்ள புகாரில், மாதம்பட்டி ரங்கராஜூடன் நான் பழகும்போது அவருக்கு திருமணமானது தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்து கேட்டபோது, "முதல் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன். நாம் சேர்ந்து வாழலாம்" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன். வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்து விடலாம் என்று கூறினார். இதற்கு நான் சம்மதிக்காத நிலையில் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்கள்தான் அப்பா என்று கூறினேன். இது அவருக்கு பிடிக்காததால் என்னை அடித்து உதைத்தார். தற்போது என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாய்கிரிசில்டா திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் அவரது புகார் மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல் ஜாய்கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்திருப்பதும், அவருடன் பாலியல் உறவு வைத்து ஏமாற்றி இருப்பதும் குற்றமாக கருதப்படும். எனவே மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி, பாலியல் அத்துமீறல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
- போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது.






