என் மலர்
இந்தியா

Beef-க்கு தடை சொன்ன மேனேஜர்... ஊழியர்கள் செய்த தரமான சம்பவம்
- இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
- போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது.






