என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தெலுங்கு டைட்டன் கேப்டன் விஜய் மாலிக அதிகப்பட்சமாக 14 புள்ளிகள் பெற்றார்.
    • உ.பி. யோதாஸ் ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார்.

    புரோ கபடி லீக் 2025 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 35-38 எனத் தோல்வியடைந்தது.

    தெலுங்கு டைட்டன்ஸ் இன்று தனது 2ஆவது அட்டத்தில் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் 35-40 எனத் தோல்வியை தழுவியது. உ.பி. யோதாஸ் அணியின் ரைடர் குமன் சிங் 7 புள்ளிகள் பெற்றார். மற்றொரு ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார். டிபெண்டர் (Defender) சுமித் 8 பேரை அட்டகாசமாக பிடித்து அவுட்டாக்கினார். இதில் ஒன்று சூப்பர் டேக்கிள் ஆகும்.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் கேப்டன் விஜய் மாலிக் ரெய்டு மூலம் 3 போனஸ் புள்ளிகள் உள்பட 13 புள்ளிகளும், டேக்கிள் மூலம் ஒரு புள்ளியும் என 14 புள்ளிகள் பெற்று அசத்தினார்.

    • திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
    • இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • பாஜக 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்களை வைத்துள்ள கட்சி.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட கட்சி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிலும், கொள்கை அளவில் பாஜக எதிரி. அக்கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றார். மதுரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2ஆவது மாநாட்டிலும் இதே கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

    விரைவில் த.வெ.க. தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், பாஜக-வை கொள்கை எதிரி என்கிறாரே? மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளாரே? அதை பற்றி கருத்து என்ன? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பபட்டது.

    அதற்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    யாருடைய சுற்றுப் பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது. நிறைய பேர் கட்சி ஆரம்பிக்கலாம். நீங்கள் கூட (பத்திரிகையாளரை பார்த்து) கட்சி ஆரம்பிக்கலாம்.

    ஒரு கவுன்சிலர் கூட ஆகல.., ஒரு எம்.எல்.ஏ. கூட ஆகல.., அவரை தோற்கடித்து விடுவேன்; இவர் எனக்கு எதிரி' என கூறுவது பக்குவமில்லாத வார்த்தையாகத்தான் கருதப்படும்.

    பாஜக 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்களை வைத்துள்ள கட்சி. உலக புகழ்ந்வாந்த தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட கட்சி. ஒரு மாநாடு நடத்திவிட்டு எதிரி என பேசுவதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியது.
    • ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், கவனக்குறைவாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

    • இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனமான நடத்தைக்கு எதிராக குரல் எழுப்புவோம்

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில்| ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சசிகாந்த் செந்தில் அவர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் பற்றியது அல்ல.. கல்வி உரிமை மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.. மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனமான நடத்தைக்கு எதிராக குரல் எழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று சீமான் விமர்சித்திருந்தார்.
    • அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.

    ஒருகாலத்தில் விஜயை புகழந்து பேசி வந்த சீமான் தற்போது த. வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இது அக்கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

    அதுவும் அண்மையில், நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று த. வெ.க. தொண்டர்களை சீமான் விமர்சித்திருந்தார்.

    சீமானின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் த. வெ.க.வின் மதுரை மாநாட்டில் அக்கட்சி தொண்டர்கள் சீமான் ஒழிக என கோஷம் எழுப்பினர்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்" என்று விஜயை விமர்சித்தார்.

    இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், "இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்ததும் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் நாம் காடு வளர்க்க பாடு படுகிறோம்" என்று தெரிவித்தார்.

    விஜயை தொடர்ந்து அணில் என்று சீமான் கிண்டலடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன.
    • அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகனின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளி விவரங்களுடன் பலமுறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.

    அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி இவை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர் நமக்கு எதிர்கட்சித் தலைவராக வாய்த்திருக்கும் அவல நிலையில், அவருடைய அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி- இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.

    தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.

    தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.

    அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் நம் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.
    • ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும்.

    டொனால்டு டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் பின்னலாடை ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், "திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60 சதவீத பங்களிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், கடுமையான வரி உயர்வால் ஏற்படும் திடீர் போட்டித்தன்மை இழப்பை ஈடுசெய்ய இழப்பீடுகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத் தொகைகள் வடிவில் நிதி நிவாரணம் வழங்க வேண்டும். உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் நிவாரணம் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    கரூர் சின்னமநாயக்கன்பட்டியில் பழையப் பேருந்துகளின் கூடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    • சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
    • பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    சென்னை பெருநகர் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் போலியான URL Link-களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் IIFL Capital Ltd என்ற முதலீட்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக நிறைய புகார்கள் வந்துள்ளன.

    இந்த மோசடிகள் சமூக வலைதள விளம்பரங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி, பணத்தை செலுத்த தூண்டப்படுகின்றனர்.

    மோசடியாளர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லாபம் வழங்குவதுபோல் குறைந்த தொகையை எடுக்க அனுமதித்து, நம்பிக்கை ஏற்படுத்தி பிறகு அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுத்தி மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனர்.

    இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பும் வங்கி கணக்குகள் அனைத்தும் IIFL நிறுவனத்தை சாராத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப மோசடியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் எவ்வித SEBI விதிமுறைப்படி எந்தவொரு ரசீதோ. ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை.

    மேலும் IIFL Capital Ltd நிறுவனமோ அல்லது SEBI-யில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனங்களோ இதுபோன்ற குழுக்கள் அல்லது அங்கிகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

    எனவே இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சார்பில் பொதுமக்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மேலும், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திக்வேஷ் ரதி பந்தில் ராணா சிக்ஸ் விளாசினார்.
    • நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணா, ரதியை வெறுப்பேற்றியதால் மோதல்.

    டெல்லி டி20 லீக்கின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தெற்கு டெல்லி- மேற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது.

    பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. மேற்கு டெல்லி கேப்டன் நிதிஷ் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதிஷ் ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திக்வேஷ் ரதி பந்து வீச வந்தார். பந்து வீசும்போது பந்தை ரிலீஸ் செய்யவில்லை. மீண்டும் பந்து வீச வரும்போது, நிதிஷ் ராணா தயாராகவில்லை. அங்கேயே மோதல் தொற்றிக் கொண்டது.

    அதன்பின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் விளாசினார். அத்துடன் திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்தினால் பயன்படுத்தும் Notebook கொண்டாட்டத்தை நிதிஷ் ராணா பேட்டில் கையெழுத்து போடுவது போன்று செய்து காண்பித்தார். இதனால் திக்வேஷ் ரதி, நிதிஷ் ராணாவை நோக்கி ஏதோ கூறினார்.

    இதனால் ராணா கோபம் அடைந்து திக்வேஷ் ரதி நோக்கி சென்றார். வாய் தகராறு கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் பெண் நடுவர் குறுக்கே வந்து இருவரையும் பிரித்து விட்டார். சக வீரர்களும் மோதலை பிரித்து விட்டனர். இதனால் இருவரும் பிரிந்து சென்றனர்.

    மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட திக்வேஷ் ரதிக்கு 80 சதவீதம் அபராதமும், நிதிஷ் ராணாவுக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    கிரிஷ் ஆட்டமிழக்கும்போது, அவரை ஆட்டமிழக்கச் செய்த பாரதி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடவர் தலையீடு செய்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    ×