search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது
    X

    இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது

    மத்திய அரசு பிறப்பித்த புதிய உத்தரவை தொடர்ந்து ஐபோன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மொபைல் போன், வீடியோ கேமரா மற்றும் தொலைகாட்சி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை உயர்த்தியதை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன்களின் விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி மொபைல் போன் இறக்குமதி செய்வதற்கான வரி 10%-இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வரி உயர்த்தப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவில் புதிய ஐபோன் மாடல்களின் விலை சராசரியாக 3.5% உயர்த்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஐபோன் 6 பழைய விலையில் இருந்து 4.3% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்த 256 ஜிபி ஐபோன் 8 விலையில் 3.1% அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.29,500க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 6 தற்சமயம் ரூ.30,780 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விலை ரூ.89,000-இல் இருந்து ரூ.3,430 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ.92,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலை ரூ.66,120 மற்றும் ரூ.75,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை முன்னதாக ரூ64,000 மற்றும் ரூ.73,000க்கு விற்பனை செய்யப்பட்டன.



    ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.50,810 மற்றும் ரூ.61,060 முதல் துவங்குகிறது. ஐபோன் 6s மற்றும் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ41,550 மற்றும் ரூ.50,740 முதல் துவங்குகிறது. புதிய விலை உயர்வில் ஐபோன் SE மட்டும் பாதிக்கப்படாமல் பழைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஐபோன் SE மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க துவங்கியதால் இதன் விலை உயர்த்தப்படவில்லை.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை பட்டியல் ஆப்பிள் நிர்ணயித்திருக்கும் எம்.ஆர்.பி. விலை ஆகும். பெரும்பாலான ஐபோன் மாடல்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களிடம் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

    கவுண்ட்டர்பாயின்ட் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஐபோன்களில் 88 சதவிகித சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக இறக்குமதி வரி உயர்வை ஈடு செய்ய ஐபோன்களின் விலையை உயர்த்துவதோடு வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆப்பிள் ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களை புதிய விலை உயர்வு எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் பத்து மொபைல் போன்களில் எட்டு மொபைல் போன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும் என கவுண்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×