search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இவை தவிர எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடலை வாங்க நீண்ட காலம் திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதன்படி ஆப்பிளின் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஐபோன் 15 என்ட்ரி லெவல் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி கிடக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14-க்கு மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரதது 900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட ஐபோன் 15 விலை ரூ. 66 ஆயிரத்து 499 என மாறியுள்ளது.

    வங்கி சலுகைகளாக ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 325 வரை குறைந்துள்ளது. இவை தவிர பயனர்கள் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • விலை உயர்ந்த ஐபோனை பறிகொடுத்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.
    • ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார்.

    குறும்பு சேட்டைகளுக்கு பெயர் பெற்ற குரங்குகள் சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை தூக்கி சென்ற சம்பவங்களை பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரசேத மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றி திரியும். அவை அடிக்கடி சுற்றுலா பயணிகளின் பொருட்களை தூக்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. சம்பவத்தன்று அங்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவரின் ஐ போனை குரங்கு ஒன்று பறித்து கொண்டு பிருந்தாவனம் மதில் சுவர் மீது அமர்ந்து கொண்டது. விலை உயர்ந்த ஐ போனை பறிகொடுத்த அந்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.

    இதை பார்த்த அங்கிருந்த சிலர் குரங்கிடம் இருந்து ஐ போனை மீட்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார். அதை பிடித்த குரங்கு தன்னிடம் இருந்த ஐ போனை கீழே தூக்கி எறிந்தது. உடனே ஐ போனை பறிகொடுத்த நபர் அதனை வேகமாக பிடித்தார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    அந்த வீடியோ வைரலாகி ஏராளமான பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    • இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
    • புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.

    அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. 

    • வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும்.
    • புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் இந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்.ஜி. அன்டர் பேனல் கேமரா ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த புதிய வகை கேமரா ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து கொண்டிருக்கும். இதன் மூலம் கேமிங் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும். தற்போதைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டைனமிக் ஐலேண்ட்-க்கு மாற்றாக புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    எல்.ஜி. குழுமத்தின் எலெக்ட்ரிக் உபகரணங்கள் உற்பத்தி பிரிவு புதிய வகை அண்டர் பேனல் கேமரா சென்சார்களை உருவாக்கும் பணிகளில் மேம்பட்ட நிலையை அடைந்திருப்பதாக கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போதைய செல்ஃபி கேமராக்களில், அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் டிஸ்ப்ளேவினுள் குறைந்தளவு வெளிச்சத்தையே அனுமதிக்கின்றன.

    இதன் காரணமாக கேமரா லென்ஸ் மற்றும் சென்சார்களுக்கு மிக குறைந்த தகவல்களே கிடைக்கும். இதனாலேயே தற்போதைய கேமராக்கள் புகைப்படங்களை குறைந்த தரத்தில் வழங்குகின்றன. இந்த அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் சந்திக்கும் சவால்களை எல்.ஜி. உருவாக்கும் அண்டர் பேனல் கேமரா சிறப்பாக எதிர்கொண்டு தரமுள்ள புகைப்படங்களை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    2026 வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் புதிய அண்டர் பேனல் கேமரா சென்சார்களை வழங்க வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என கூறப்படுகிறது. அண்டர் ஸ்கிரீன் கேமராவை வழங்கும் முன்பு ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐ.டி. அம்சத்திற்காக அண்டர் டிஸ்ப்ளே சென்சாரை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இசட்.டி.இ. ஆக்சன் 30 5ஜி மற்றும் சியோமி மி மிக்ஸ் 4 போன்ற மாடல்கள் மற்றும் அதன் பிறகு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 போன்ற மாடல்களில் செல்ஃபி கேமரா சென்சார்கள் டிஸ்ப்ளேவின் கீழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
    • ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

     

    இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.

    ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். 

    • புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
    • இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

    அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

    சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும்.
    • ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார்.

    ஆன்லைன் குறைந்த விலை கொண்ட பொருளை ஆர்டர் செய்து, மாறாக விலை உயர்ந்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா? ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுதலாக ஆர்டர் மாறி டெலிவரி செய்யப்படுவதும், மாற்றப்படுவதும் சாதாரண விஷயமாகி விட்டது. அந்த வகையில், வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்காக நான்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    நான்கு ஐபோன்களை ஆர்டர் செய்தவருக்கு 60 ஐபோன்கள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிக்டாக்கில் லெஜன்ட்ஸ்_கியோ என்ற பயனர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆன்லைனில் ஆர்டர் செயதார். இதில் ஒரு யூனிட் (1 டி.பி.) தனக்கும், மற்ற மூன்று (256 ஜி.பி.) யூனிட்கள் ஊழியர்களுக்காக ஆர்டர் செய்யப்பட்டது.

    ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார். இவர் மொத்தம் 3600 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 763 விலையில் புதிய ஐபோன்களை ஆர்டர் செய்தார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இவருக்கு டெலிவரி செய்த ஐபோன்களின் மதிப்பு 96 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 93 ஆயிரத்து 680 ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் எப்படி இத்தகைய தவறை செய்திருக்க முடியும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழந்துள்ளனர். ஆப்பிளிடம் நேரடியாக சாதனங்களை ஆர்டர் செய்பவர்கள் மிகக் குறைந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும் என்பது மர்மமாகவே உள்ளது.

    • சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

    டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."

    "விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."

    "இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.
    • சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.

    உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர்.

    வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
    • புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைப்பு.

    புனே மாவட்டத்தில் உள்ள குடோனின் ஷட்டரை உடைத்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை திருடியதாக 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜார்க்கண்டை சேர்ந்த தோபாஜுல் குர்ஷித் ஷேக் என்றும் மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவினரால் மஸ்ஜித் பந்தர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    தோபாஜூல் குர்ஷித் கடந்த ஜூலை 15ம் தேதி புனே அருகே வாகோலி பகுதியில் உள்ள குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.

    இதைதொடர்ந்து, குர்ஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரிக்கும் புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×