என் மலர்
மொபைல்ஸ்

2026ல் மடிக்கக்கூடிய ஐபோன்கள்... லீக் ஆன முக்கிய தகவல்..?
- மடிக்கக்கூடிய ஐபோன் திட்டம் குறித்து விவரங்களை பகிர்ந்துள்ளார்.
- ஐபோன் ப்ளிப் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. ஐபோன் ஃபோல்டு (iPhone Fold) என அழைக்கப்படும் இந்த மாடல் மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து மற்றொரு மடிக்கக்கூடிய ஐபோனையும் ஆப்பிள் உருவாக்க ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளூம்பெர்க் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் மார்க் குர்மன், வெளியிட்டுள்ள தகவல்களில், ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் திட்டம் குறித்து விவரங்களை பகிர்ந்துள்ளார். அதன் படி, ஐபோன் ஃபோல்டு-ஐ விட சிறிய அளவிலான, கிளாம்ஷெல் (clamshell) வடிவமைப்பில் உருவாகும் ஐபோன் மாடலை ஆப்பிள் பரிசீலித்து வருகிறது. இது ஐபோன் ப்ளிப் (iPhone Flip) என அழைக்கப்படுகிறது.
இந்த ஐபோன் ப்ளிப் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஐபோன் ஃபோல்டு மாடலுக்கு பின்னர் அறிமுகமாகலாம். இருப்பினும், இந்த மாடலின் உருவாக்கம் இன்னும் உறுதியான நிலையில் இல்லை என்றும், திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமா என்பது தெளிவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது வரை கசிந்திருக்கும் தகவல்களின் படி, ஐபோன் ப்ளிப் மாடல் சதுர வடிவமைப்புடன், மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 7 போன்ற கிளாம்ஷெல் ஸ்மார்ட்போன்களுக்கு ஒத்த வடிவத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் மடிக்கக்கூடிய ஐபோனான ஐபோன் ஃபோல்டுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் நம்புகிறது. இதன் மூலம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலுக்கு பொதுவாகவே அதிக தேவை உருவாகலாம் என்றும், வாடிக்கையாளர்கள் பல்வேறு வடிவமைப்புகளில் ஐபோன்களை எதிர்பார்க்கலாம் என்றும் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார்.






