search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9 தொகுதிகளுக்கு குறி... அதிக தொகுதி கேட்டு நெருக்கடி: அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறாதது ஏன்?
    X

    9 தொகுதிகளுக்கு குறி... அதிக தொகுதி கேட்டு நெருக்கடி: அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறாதது ஏன்?

    • எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தாலும் சட்ட போராட்டங்கள் நடத்தியும் கட்சியை தன்வசமாக்கினார்.
    • கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் கூட எடப்பாடி பழனிசாமி-அமித்ஷாவை சந்திக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதாவை தயார்படுத்தும் வேலைகளில் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்திலும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

    தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா பலவீனமாகவே இருக்கிறது. கூட்டணி பலத்தை நம்பிதான் தேர்தலை சந்திக்க வேண்டும். பா.ஜனதாவின் நெருங்கிய கூட்டாளி அ.தி.மு.க. அந்த கட்சியில் ஏற்பட்ட பிளவை சரிகட்டி கூட்டணியை பலப்படுத்த பா.ஜனதா எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தாலும் சட்ட போராட்டங்கள் நடத்தியும் கட்சியை தன்வசமாக்கினார். அ.தி.மு.க. நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த பா.ஜனதா மேலிடமும் எடப்பாடி பழனிசாமி தலைமையை அங்கீகரித்து அவருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.

    அப்படியிருந்தும் போது கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் கூட எடப்பாடி பழனிசாமி-அமித்ஷாவை சந்திக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேற்று இரவு அல்லது இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை வருவார். அமித்ஷாவை சந்திப்பார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அவர் சேலத்தைவிட்டு புறப்படவில்லை. உடல்நிலை சரி இல்லாததால்தான் அவர் சேலத்தில் ஓய்வெடுக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சேலத்தில் நேற்று காலையில் கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெற இருக்கும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் முதலில் நேற்று (10-ந்தேதி) நடப்பதாகத்தான் இருந்தது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னையில் இருந்தால் அமித்ஷாவை சந்திக்க வேண்டியது வரும் என்பதற்காகவே மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தையும் எடப்பாடி பழனிசாமி தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.

    கூட்டணியாக இருந்தாலும் இப்படி இந்த இரு கட்சியினரிடமும் இன்னமும் நெருக்கமான பிணைப்பு இல்லை. தேசிய கட்சியான காங்கிரஸ் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதைப்போல் பா.ஜனதாவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

    ஆனால் புதிதாக கட்சி தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அண்ணாமலையோ தனது தலைமையின் கீழ் கட்சி வலிமை பெற்றுள்ளது என்பதை தனித்து நின்றுகூட நிரூபித்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

    இதனால் கட்சி மேலிடத்துக்கு அவர் கொடுக்கும் அறிக்கைகள் அ.தி.மு.க. வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பா.ஜனதாவும் தென் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை தேர்வு செய்து தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கேட்பது அதைவிடவும் ஒரு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலைப்பாடும் எடப்பாடி பழனிசாமியை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    எனவே கூட்டணி, தொகுதிகள் என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று நழுவி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பா.ஜனதா குறிவைத்துள்ள 9 தொகுதிகளில் 4 முதல் 5 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தின் நிலைமைகளை கூர்ந்து கவனிக்கும் அமித்ஷா நேற்று தன்னை சந்திக்க வந்த முக்கியஸ்தர்களிடம் அவர்கள் கருத்தை எதிர்பார்த்துள்ளார். ஆனால் கட்சி பெரிய அளவில் வளரவில்லை என்பதை மட்டும் சிலர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×