search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் சிக்கிய காரின் மதிப்பு ரூ.5 லட்சம், பழுது பார்க்க ரூ.8 லட்சம்- புலம்பும் உரிமையாளர்
    X

    வெள்ளத்தில் சிக்கிய காரின் மதிப்பு ரூ.5 லட்சம், பழுது பார்க்க ரூ.8 லட்சம்- புலம்பும் உரிமையாளர்

    • சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.
    • இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் வடக்கே 4 தெற்கே 4 என்று 8 மாவட்டங்களை அடியோடு புரட்டிப் போட்டது. சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.

    இதனால் பழுதடைந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்க வாகன ஷோரூம்களில் வாகனங்கள் குவிந்து உள்ளன. இந்த வாகனங்களை பழுது நீக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    தண்ணீரில் மூழ்கிய கார்களை முற்றிலும் மூழ்கியிருந்தால் 'பி' பிரிவு, பாதி டயர் அளவு மூழ்கி இருந்தால் 'சி' பிரிவு என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கேற்ப தொகைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

    ஆனால் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக இல்லை என்றே பலரும் புலம்புகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சுமதி அன்பரசு. காங்கிரஸ் நிர்வாகியான இவரது காரும் தண்ணீரில் சிக்கியது. அந்த காரை பழுது நீக்குவதற்காக அம்பத்தூரில் ஒரு ஷோரூ மில் விட்டிருக்கிறார். அந்த காரை பழுது நீக்க சுமார் ரூ.8 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

    இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது, ரூ.4 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். சரி, அந்த காரை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று மதிப்பிட்ட போது ரூ.5 லட்சம் என்று மதிப்பிட் டுள்ளார்கள்.

    இதனால் திகைத்து போன சுமதி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் தர ஒப்புக் கொண்டுள்ள ரூ.4 லட்சத்தையாவது தந்தால் மீதி பணம் போட்டு வேறு காராவது வாங்கலாம் என்று நினைத்துள்ளார்.

    ஆனால் பணத்தை உங்களுக்கு தர முடியாது பழுது நீக்கும் நிறுவனத்துக்குத் தான் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இன்சூரன்ஸ் கட்டுவது நான்தானே. பணத்தை என்னிடம் தருவது நியாயம் தானே? என்று கேட்டுள்ளார்.

    ஐந்து லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.8 லட்சத்தை செலவழிப்பதில் எந்த நன்மையும் கிடையாது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்து வருகிறார். இதே போல் இன்னும் பலர் தவிப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×