search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3,449 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    3,449 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    • மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வர வழைக்கப்பட்டனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிச்சாங் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

    கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.

    கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மூர்த்தி, எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×