search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேலும் 7 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 இன்றே கிடைத்தது
    X

    மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேலும் 7 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 இன்றே கிடைத்தது

    • மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் 7 லட்சம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந் தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தீபாவளி பண்டிகை 12-ந்தேதி வருவதையொட்டி 10-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்றே தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது.

    இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர்கள் கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது.

    அதில் புதிதாக 7 லட்சம் மகளிர் அந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை அவர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வழங்க உள்ளார்.

    இப்போது இந்த திட்டத்தில் மொத்த பயனாளிகள் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் பயன்பெற உள்ளனர். மாதம் 1000 ரூபாய் வீதம் வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

    இந்த திட்டத்தை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த திட்டம் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஏற்படுத்தி தந்தீர்களோ அதேபோல பாராளுமன்ற தேர்தலிலும் அந்த வெற்றியை தருவீர்கள். அதற்காகத்தான் முதலமைச்சர் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    2 நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வில் இருந்தார். நாளைக்கு வெளியில் வந்து விடுவார். நாளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    முதலமைச்சர் இவ்வளவு சீக்கிரம் வருகிறார் என்றால், காரணம் உந்து சக்தியாக இருக்க கூடியது நீங்கள்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×