search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியே இலக்கு- அண்ணாமலை பேட்டி
    X

    தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியே இலக்கு- அண்ணாமலை பேட்டி

    • 2004 முதல் 2014 வரையிலான தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட தொகை 4156 கோடி ரூபாய்.
    • கடந்த 8 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 1,04,845 கோடி ரூபாய்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'மாலைமலருக்கு' சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சியை பற்றி...

    பதில்:-கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நல்லாட்சியில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் குறைந்த பட்சம் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் இங்கு பொய்களை மட்டுமே வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வரும் பலர், பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இந்த சாதனைகளை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தனர் என்பது தமிழகத்தில் அனைவரும் அறிந்ததே.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு மக்களுக்கு திமுகவின் இரட்டை நிலைப்பாடுகள், மக்கள் விரோத போக்குகள், இவர்கள் கட்டவிழ்த்து விட்ட பொய்கள் ஆகியவை புரிய தொடங்கிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் பெரிய கட்சியாக பா.ஜ.க. முன்னேற்றம் கண்டது. மக்கள் பாஜக பக்கம் திரளாக வரத் தொடங்கி விட்டதற்கான சான்று.

    இதற்கு முன்னர் தமிழக பா.ஜனதாவின் தலைவர்களாக இருந்தவர்கள் போட்ட விதை தான் இன்றைய வளர்ச்சி.

    கேள்வி:- பா.ஜனதாவை 2-வது பெரிய கட்சி என்று நினைக்கிறீர்களா? அல்லது 3-வது பெரிய கட்சி என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- இன்று தமிழகத்தில் மக்களின் குரலாக ஒலிப்பது பா.ஜ.க. தான். மத்திய அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாநில அரசின் தவறுகளை தரவுகளுடன் சுட்டி காட்டி மக்கள் அவதிக்குள்ளாதவாறு மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதில் தான் முனைப்புடன் இருக்கிறோம்.

    இதைத் தான் மக்களும் ஒரு அரசியல் கட்சியிடம் எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது எங்கள் இலக்கல்ல. தமிழகத்தில் மக்களின் நல்லாதரவுடன் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு.

    கேள்வி:- அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு பா.ஜ.க.விற்கு சாதகமா?

    பதில்:- பா.ஜனதா என்றைக்குமே மற்ற கட்சியில் உள்ள பிரச்சினைகளில் தலையிடுவது இல்லை. அ.தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்த ஒரு கட்சி. மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த பல தலைவர்களை கொண்ட ஒரு கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோமே தவிர அவர்களின் பிளவை சாதகமாக்கிக் கொள்ள நினைத்ததில்லை.

    தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளை சாராத லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்களை சென்றடைய தான் தமிழகத்தில் பாஜக வேலை செய்து வருகிறது. இன்று இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. அதனால் இளைஞர்கள் திரளாக வந்து பா.ஜ.க.வில் இணைகிறார்கள். இது வேறொரு கட்சியை பிளவுபடுத்துவதாக எண்ணுவது தவறு.

    கேள்வி:-திராவிட கட்சிகளை வீழ்த்தி அதிகாரத்திற்கு வரமுடியுமா ? எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

    பதில்:-தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. காவேரி, வைகை கரைகளில் பல நூற்றாண்டுகளாக சீரும் சிறப்புமாக வாழ்ந்த ஒரு மண். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பண்படுத்திய மண். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளவுபட்ட பூமி இது. 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த தி.மு.க.வினால் இன்றுவரை சமூக நீதியையும் சம உரிமையையும் வழங்க முடியவில்லை.

    இங்கு நடப்பது தேர்தல் கணக்கு. வளர்ந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்திற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இதுவரை 13,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராமபுறங்களில் 2019ஆம் ஆண்டு வரை 17 சதவீதம் வீடுகளில் குடிநீர் வசதி இருந்துள்ளது. இன்று 2 ஆண்டுகளில் 50 சதவீத வீடுகளுக்கு குடிநீர் வசதி ஜல்ஜீவன் திட்டம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூட ஒரு மோடி தேவைப்படுகிறார். காமராஜர் போட்ட கனமான அடித்தளத்தில் தான் தமிழகம் தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் வளர்ந்தது.

    மாற்றம் என்பது வருவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால் மாற்றம் கண்டிப்பாக வரும். ஏற்றம் என்று ஒன்று இருந்தால், இறங்கி தான் ஆகவேண்டும். இது இயற்கையின் விதி. தி.மு.க. மட்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டதா?

    கேள்வி:- திராவிட கட்சிகளே கூட்டணியை நம்பிதான் உள்ளன. பா.ஜ.க.வால் கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா?

    பதில்- கேள்வியில் பதிலும் உள்ளது. இங்கு கூட்டணி இல்லாமல் தி.மு.க. தேர்தலை சந்திக்குமா? 70 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.க.வுக்கு கூட்டணி தேவைப்படுகிறது, அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு. தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி. திமுக தனியாக போட்டியிட முன்வரட்டும் அவர்களை தனியாக எதிர்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில் 2024 தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உண்டா?

    பதில் :-இன்று பா.ஜனதாவின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.

    இன்று எங்கள் சிந்தனை செயல் தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சியை சுற்றியே உள்ளது. அது மட்டும் அல்லாது, கூட்டணி முடிவுகளை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும், கட்சியை மாநிலத்தில் வலுப்படுத்துவது மட்டுமே எங்கள் குறிக்கோள்.

    கேள்வி:- மதசார்புள்ள கட்சி என்ற திரையை இன்னும் உங்களால் முற்றிலுமாக நீக்க முடியவில்லையே?

    பதில்:-மற்ற சாட்சிகளுக்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் சமம்.

    இங்குள்ள சில கட்சிகளின் இரட்டை நிலைப்பாடுகளை நாம் ஒரு நாள் முழுவதும் பேசலாம். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி. ஆனால் அதே சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினரிடம் பொய்களை பரப்பி அவர்களை போராட்டத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களும் தி.மு..க மற்றும் காங்கிரஸ் தான் என்பதை மறுக்கமுடியுமா?

    சிறுபான்மை மக்களுக்கு திமுக மற்றும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு விரைவில் புரியும்.

    கேள்வி :- ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அரசுக்கு பலன் அளித்திருக்கலாம். மக்களுக்கு பலன் இல்லையே!

    பதில்:-ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பல நலத்திட்டங்களை மக்களின் பயனுக்காக வகுத்து அதை செயல்படுத்த முற்படும் போது அதற்கு நிதி தேவைபடுகிறது. ஒரு பகுதியை மக்களிடம் வரியாகவும் மீதமுள்ள தொகையை கடனாக பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது மத்திய அரசு.

    சமீபத்தில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரித்திருத்தங்கள் தமிழக நிதி அமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் இங்கோ ஆவின் பொருட்களின் விலை ஜி.எஸ்.டி. விலை உயர்வை விட கூடுதலாக உள்ளது என்று நான் உட்பட நமது மத்திய நிதி அமைச்சர் கூட பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை திமுக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    கேள்வி:- கருப்புப்பண மீட்பில் தோல்வி தானே!

    பதில்:-இந்தியாவில் நேரடி வரி வருவாய் பண மதிப்பிழப்பீடு நடவடிக்கைக்கு பிறகு அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இப்போது அதிக மக்கள் வருமான வரி செலுத்துகிறார்கள்.

    பண மதிப்பிழப்பீடு நடவடிக்கைக்கு 5 வருடங்களுக்கு பிறகு, இன்று இந்தியாவில் புதிய வீடுகள் வாங்குவதில் 2016-க்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் கருப்பு பணத்தின் பங்கு 75 முதல் 80 சதவீதம் குறைந்துள்ளது.

    ரியல் எஸ்டேட் தொழிலில் தான் அதிகமாக கருப்பு பணம் முதலீடாக மாறும். அதில் கருப்பு பணத்தின் தாக்கம் குறைந்துள்ளது என்பது கருப்பு பணத்தின் புழக்கத்தின் குறைவாகவே நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

    2004 முதல் 2014 வரையிலான தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட தொகை 4156 கோடி ரூபாய். கடந்த 8 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 1,04,845 கோடி ரூபாய்.

    கடந்த 8 ஆண்டுகளில் கருப்பு பணத்தை பாதுகாக்க முடியாமல் பணமுதலைகள் தோல்வியுற்றுள்ளார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    கேள்வி:- நாடுமுழுவதும் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:-அவர்களின் குற்றங்களை, ஊழலை மக்கள் மன்றத்தில் நாங்கள் வைப்பது அவர்களை பலவீனப்படுத்தினால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்.

    கேள்வி:-2024 தேர்தலில் தமிழகத்தில் உங்கள் லட்சியம்?

    பதில்:- இதற்கு முன் பல மேடைகளில் சொன்னது போல, குறைந்தபட்சம் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திலிருந்து அனுப்புவதே எங்கள் லட்சியம்.

    கேள்வி:- பா.ஜனதா மாடல் எப்படி இருக்கும்?

    பதில்:- ஊழலற்ற உன்னதமான ஆட்சியின் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் மோடியின் நல்லாட்சியின் பிரதிபலிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி இருக்கும்.

    காலம் காலமாக அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி வரும் மக்கள் முதல் முறையாக முன்னேற்றம் காண்பார்கள். குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஆட்சியே பா.ஜ.க. மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×