search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9 நாட்களாக தெருக்களில் தேங்கி நிற்கும் மழை தண்ணீர்
    X

    9 நாட்களாக தெருக்களில் தேங்கி நிற்கும் மழை தண்ணீர்

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
    • 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


    2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.

    மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.


    சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×