search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் 8 ஆயிரம் டன் அரிசி சேதம்: 500 டன் கோதுமையும் வீணானது
    X

    தூத்துக்குடியில் 8 ஆயிரம் டன் அரிசி சேதம்: 500 டன் கோதுமையும் வீணானது

    • தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடியில் அமைந்து உள்ளது. இங்கு பொது வினியோகத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுகின்றன.

    ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடோனில் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும், 2 ஆயிரம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் சூழ்ந்து உள்ளே புகுந்தது.

    இதனால் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. அதேபோன்று கோதுமை மூட்டைகளும் நனைந்து முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் டன் வரை ரேஷன் அரிசியும், 500 டன் வரை கோதுமையும் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு இந்திய உணவுக்கழக ஊழியர் சங்க செயலாளர் கதிர்வேல் கூறுகையில், 'தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக இந்திய உணவுக்கழக குடோனுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருக்கலாம். இதனால் சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஆனால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்கு இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×