search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    குடிமராமத்து பணிகள் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    விருதுநகர்:

    குடிமராமத்து பணிகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் திமுக சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது? என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

    சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டி மற்றும் செவலூர் புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பதிவுசெய்த விவசாய சங்கங்களின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டப் பணிகளை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் உள்ள கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதை நாட்டு மக்கள் வரவேற்கின்றார்கள்.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்கள் குடிமராமத்து பணிகள் செய்யப்படுகின்றன இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை.

    தி.மு.க.விற்கு 6 லட்சம் மனு வந்ததாகவும் அதில் 5 லட்சம் மனுவிற்கு நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்றும் மீதமுள்ள 1 லட்சம் மனு சிறு, குறு தொழில் சம்பந்தப்பட்டது என்றும் தலைமை செயலாளரிடம் தி.மு.க.வினர் மனுக்களை கொடுத்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த மனுவில் அரிசி, பருப்பு, துணிவகைகள் கேட்டுதான் அனைத்து மனுக்களும் உள்ளன. தி.மு.க.வினர் வாங்கிய மனுக்களுக்கு தி.மு.க. அறக்கட்டளை மூலமே நிவாரணம் வழங்கலாம்.

    ஏப்ரல், மே, ஜூன் 3 மாதங்களுக்கும் ரேசன் கடையில் அரிசி பருப்பு எண்ணெயை அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றது. முதல்-அமைச்சரின் சிறப்பு முகாம் மூலம் 10 லட்சம் மனுக்கள் வரப்பெற்று அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    எம்.பி. தேர்தலுக்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உதயாநிதி ஸ்டாலின் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கிராமம் கிராமமாக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கினார்கள்.

    அந்த மனுக்களை தி.மு.க.வினர் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த மனு எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது. இந்த தொகுதி எம்.பி. இந்த பகுதியில் ஓட்டும் கேட்டு வரவில்லை. நன்றி கூறவும் வரவில்லை.

    பொதுமக்களுக்கு பிரச்சினை என்றால் தெருவிற்கு ஓடிவருவது என்னை போன்ற அ.தி.மு.க. தொண்டர்கள்தான். விருதுநகர் மாவட்டம் முழுவதும் தாமிரபரணி குடிநீரை கொண்டு வந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கண்ணன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் வேல்ராணி உமாலட்சுமி, கண்மாய் பாசன சங்க தலைவர் சந்திரன், கொத்தனேரி கூட்டுறவு சங்க தலைவர் மாரிமுத்து, நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிசெல்வி, சித்தம நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னு தேவர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர்கள் சீனிவாசன், காசிராஜன், வேண்டுராயபுரம் கூட்டுறவுசங்க தலைவர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி ராமராஜ்பாண்டியன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், இளைஞர் பாசறை தனுஷ், மணி, இளைஞரணி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×