search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம்
    X
    உச்சநீதிமன்றம்

    துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

    இதனால் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

    ஓ பன்னீர் செல்வம்

    இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோரும் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும்போது, அது தொடர்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்? என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில், கடந்த ஜனவரி 24-ந்தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் தி.மு.க. தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி ‘11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு’ கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  


    Next Story
    ×