search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    திமுக பேரணியில் காங்கிரசார் ஆயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பா.ஜ.க. அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து கட்சியினரும், போராட்டம் நடத்தி வருகிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக 800-க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    54 அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அடக்கு முறையை அ.தி.மு.க. அரசு ஏவி விட்டிருக்கிறது.

    தமிழகத்தில் எழுந்து வரும் கடும் எதிர்ப்பை ஒருமுகப்படுத்துகிற வகையில் வருகிற 23-ந்தேதி சென்னையில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது.

    ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் இந்தப் பேரணியில் பெருமளவில் அனைத்து தரப்பு மக்களும் திரண்டு பங்கேற்க இருக்கிறார்கள்.

    மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் மூவர்ணக் கொடியுடன் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும்.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் வழங்கப்பட்டதை பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிற பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் கண்டனப் பேரணி அமைய வேண்டும்.

    இப்பேரணியின் மூலம் சென்னை நகரமே திணறியது என்கிற வகையில் பெருமளவில் அணி அணியாய், அலை அலையாய் திரண்டு வர வேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் அன்போடு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×