search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும்கட்சி சதி செய்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு

    எதிர்க்கட்சியினர் மீது பழிபோட்டு உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும்கட்சி சதி செய்கிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அரசிடம் இருந்தோ, மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ எந்த அதிகாரபூர்வமான தகவலும் வரவில்லை. ஆனால் பல மர்மமான தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆளும்கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மற்ற கட்சிகளும் விருப்ப மனுக்கள் வாங்குகின்றன. இருந்தாலும் ஆளும்கட்சி தேர்தலை நடத்தவிடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலில் நடுநிலையாக அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆணையாளர் உடனே மாற்றப்பட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தலை 3 கட்டமாக நடத்தப்போவதாக யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வருகின்றன. அதாவது மாவட்டத்தை 3 மண்டலமாக பிரித்து தேர்தல் நடத்துவதாகவும் அல்லது கிராம பஞ்சாயத்துகளுக்கு முதல் கட்டமாகவும், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2-வது கட்டமாகவும், மாநகராட்சிக்கு 3-வது கட்டமாகவும் தேர்தல் நடத்த முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி 3 கட்டமாக தேர்தல் நடத்தினால் ஆளும்கட்சி தனது அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி அனைத்து பதவிகளையும் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களை வெற்றி பெற செய்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்துவிடுவார்களோ என்ற ஐயம் எழுகிறது.

    எனவே ஜனநாயக முறைப்படி சட்ட நெறிகளுக்கு உட்பட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும். தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மறுவரை செய்யாமல் தேர்தலுக்கு பிறகு மறுவரை செய்வோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல? 5 மாவட்டங்களும் தனி நிர்வாகம், தனி மாவட்ட பஞ்சாயத்து ஆகும். இதை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் வழக்கு தொடர்ந்தவர்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் பழிபோட்டு ஆளும்கட்சி தேர்தலை நிறுத்த சதி செய்கிறது.

    திருவிழா கூட்ட திருடன் போல், அ.தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன. திருவிழா கூட்ட திருடன், மற்றவர்களை திருடன், திருடன் என்று கூறி கொண்டே திருடுவான். அதுபோல் அமைச்சர்கள் மற்றவர்கள் மீது பழியை போட்டுவிட்டு அவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் ஆகியும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. உடனே நிவாரணம் வழங்கவேண்டும். தமிழகத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது கவலை அளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×