search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காட்சி
    X
    போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காட்சி

    ஹெல்மெட் இல்லாமல் வந்தவர் போலீசாருடன் தகராறு - நடுரோட்டில் மொபட்டை விட்டு சென்றவரால் பரபரப்பு

    சென்னையில் ஹெல்மெட் இல்லாமல் வந்தவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு ஓட்டி வந்த மொபட்டை நடுரோட்டில் விட்டு சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    போரூர்:

    சென்னை முழுவதும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அமைந்தகரை அண்ணா வளைவு அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டி வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்கு பதிவு செய்து வந்தனர்.

    அப்போது அவ்வழியே மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மனைவியுடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாதது குறித்து கேட்டு அபராதம் விதிக்கப் போவதாக தெரிவித்தனர்.

    ஆனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்காமல் நடுரோட்டிலேயே நின்று கொண்டு “என்னை ஏன் மடக்கினீர்கள். ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவசியம் கிடையாது” என்று கூறி இன்ஸ்பெக்டர் குமாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவரிடம் வழக்குபதிவு செய்கிறோம். நீதிமன்றத்தில் அபாராத தொகையை செலுத்துமாறு இன்ஸ்பெக்டர் கூறினார்.

    ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த நபர் திடீரென சாலையில் மொபட்டை நிறுத்தி பூட்டி விட்டு சாவியை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    போலீசாருடன் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தபோதே அந்த நபருடன் வந்த அவரது மனைவி வண்டியில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 வாலிபர்களை ஹெல்மெட் போடச் சொன்ன வேளச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாக்கப்பட்டார். அவரது ஹெல்மெட்டையே பிடுங்கி தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×