search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் கொள்ளை
    X
    டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் கொள்ளை

    மணப்பாறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை

    மணப்பாறை அருகே அரிவாளை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் மர்ம நபர்கள் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ஊனையூர் கிராமம். மாவட்டத்தின் கடைசி பகுதியான இங்கு அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 47) என்பவர் சூபர்வைசராகவும், மணப்பாறை ஆழிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (37) என்பவர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் விற்பனை நேரம் முடிந்ததும் கடையை அடைக்க தயாராகிக் கொண்டு இருந்தனர். முன்னதாக நேற்றைய விற்பனை பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 160-ஐ கடையின் கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டினர்.

    கடையை பூட்டிக்கொண்டு இருந்தபோது அங்கு இரண்டு மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் பெருமாள், ஆறுமுகம் இருவரையும் மிரட்டினர்.

    மேலும் பெருமாளை எட்டி உதைத்து கீழே தள்ளினர். அப்போது அவரிடம் இருந்த கடையின் சாவியை வாங்கி திறந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளநாட்டை அடுத்த கைகாட்டி அருகேயுள்ள வெள்ளைய கோன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையில் இரவில் வந்த கொள்ளையர்கள் கடை மேலாளர் மற்றும் விற்பனையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை டாஸ்மாக் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் ஊழியர்களை தாக்கி கொள்ளை நடந்துள்ளது. இது டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×