search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே லாரி மீது கார் மோதி தாய்-மகன் பலி
    X

    ஆத்தூர் அருகே லாரி மீது கார் மோதி தாய்-மகன் பலி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆத்தூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 45). இவருடைய மனைவி விஜயலட்சுமி(38). இவர்களது மகன் மணிகண்டன்(6)

    இவர்களும், இவர்களது உறவினர்கள் சங்கவி(21), வினோதினி(29), ஸ்ரீராம்(8), குமாரி(55), பிரியதர்ஷினி (18) ஆகியோரும் ஒரு காரில் கல்லூரி அட்மி‌ஷன் தொடர்பாக கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு அவர்கள் அதே காரில் சேலம் வழியாக ஊருக்கு திரும்பினர். காரை பரணிதரன் ஓட்டினார்.

    அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் கார் வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    காரில் இருந்த பரணிதரன், சங்கவி, வினோதினி, பிரியதர்ஷினி, ஸ்ரீராம், குமாரி ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்ட அவர்கள் வலியால் கதறி துடித்தனர். தங்களை காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு கதறி அழுதனர்.

    விபத்தை பார்த்த பொதுமக்கள் காருக்குள் இருந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விபத்து பற்றி குறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார் விரைந்து வந்து பலியான விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், விபத்து நடந்த ஏரிக்கரை பகுதியில் மின் விளக்குகள் இல்லை. வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்ததால் லாரி சாலையில் நிறுத்தி இருந்தது தெரியாமல் கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது தெரியவந்தது.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரிக்கரை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 6 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 48). லாரி டிரைவர். இவரும், இவரது உறவினர் பூமாலையும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு கல்பகனூரில் இருந்து பெத்தநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் செந்தமிழ் செல்வன், பூமாலை ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செந்தமிழ் செல்வன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பூமாலை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×