search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லாவரம் உள்பட புறநகரில் 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் வருகிறது: தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
    X

    பல்லாவரம் உள்பட புறநகரில் 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் வருகிறது: தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

    பல்லாவரம் உள்பட புறநகரில் 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் வருகிறது, சட்டசபையில் இன்று குடிநீர் பிரச்சினை பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மற்ற இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது இதனால் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

    சட்டசபையில் இன்று குடிநீர் பிரச்சினை பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பல்லாவரம் இ. கருணாநிதி (தி.மு.க) கொண்டு வந்து பேசினார். அவர் கூறியதாவது:-

    குடிநீர் பிரச்சினை எங்கு பார்த்தாலும் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் கடந்த 6 மாதமாக பல்லாவரம் பகுதியில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. மெட்ரோ வாட்டர் மூலம் செம்பரம்பாக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பழைய சீவரத்தில் இருந்து தான் தண்ணீர் வருகிறது.

    பல்லாவரத்துக்கு 45 லட்சம் லிட்டர், பம்மல் பகுதிக்கு 6 லட்சம் லிட்டர், அனகாபுத்தூர் பகுதிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது. இது போதுமானதாக இல்லை. 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைப்பதால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.ரூ. 99 கோடியில் பல்லாவரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு மார்ச் மாதமே தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அது காலதாமதம் ஆகிறது. இந்த ஆண்டே அந்தப்பணிகள் முடிக்கப்படுமா? இதே போல் பம்மலில் ரூ. 43 கோடியில் குடிநீர் திட்டப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வட நெம்மேலியில் ஏற்கனவே தி.மு.க ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அது தென்சென்னைக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த கடல் குடிநீரை பல்லாவரம் பகுதிக்கு விநியோகம் செய்தால் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறையும்.

    இதே போல் பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, பொழிச்சலுர் ஆகிய பகுதிகளுக்கும் கடல் குடிநீரை கொண்டு வரவேண்டும். மேளச்சேரியில் புதிய பம்பிங் ஸ்டே‌ஷன் அமைத்து குடிநீர் விரைந்து கொண்டு வர முடியும். இதே போல் பல்லாவரத்தில் பாதாள சாக்கடைப்பணியில் 54 கி.மீ. தூரத்துக்கு தொடங்கப்படாமல் உள்ளது.

    அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை, பொழிச்சலூர், சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:-

    இந்த ஆண்டு 62 சதவீதம் மழை குறைவு ஏற்பட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது ஆனாலும் அம்மாவின் அரசு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தண்ணீர் பிரச்சினையை சமாளித்து அனைத்து பகுதிக்கும்.

    தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பல்லாவரம் பகுதிக்கு பாலாற்றில் இருந்து தினசரி 50 மில்லியன் லிட்டரும் மெட்ரோ வாட்டரில் இருந்து 2 மில்லியன் லிட்டரும், 430 ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வரப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை இவ்வளவு நாளும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இப்போது சென்னை குடிநீர்வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட தண்ணீரை வழங்க இயலவில்லை. அதற்கு பதிலாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தனியார் லாரிகள், குடிநீர் வாரிய லாரிகள் மூலமும் தண்ணீர் அனுப்பப்பட்டு 6 நாட்கள் ஒருமுறை சுழற்சி முறையில் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    பல்லாவரம் எம்.எல்.ஏ, கூறும் போது 30 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக குறிப்பிட்டார். அதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விரைந்து தண்ணீர் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும். இதே போல் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் தண்ணீர் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.

    அந்தப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அது மேலும் துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×