என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
    • இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    துபாய்:

    ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?

    இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது.

    நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.

    எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது.

    இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது

    ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன.
    • டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார்

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரை 2-2 என சமன் செய்தது.

    இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய யுவராஜ் சிங், "இந்திய அணி வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு இளம் அணி என்பதால், தொடர் சமநிலையில் முடிந்தாலும், இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். இங்கிலாந்தில் சென்று நன்றாக விளையாடி உங்களை நிரூபிப்பது எளிதல்ல

    அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார். உங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதனை எப்படி கையாள வேண்டும் என கில் நிரூபித்து விட்டார்" என்று தெரிவித்தார்.

    • ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது.
    • சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட ராஜஸ்தான் அணி ஆலோசனை நடந்தி வருகிறது.

    மும்பை:

    2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக எதிர் அணிகளில் இருந்து டிரேட் செய்து சில வீரர்களை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே தங்களது அணியை கட்டமைக்க முடிவு எடுத்திருக்கிறது.

    அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட வேண்டும் என்று ராஜஸ்தான் அணி ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேச்சுவார்த்தைக்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜிடம் இருந்து பதில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த வீரரையும் கொடுக்க முன் வரவில்லை.

    • அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
    • இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர்.

    மும்பை:

    கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

    அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

    ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர்.

    சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார்.

    அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழா, இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மாற்றம் இல்லை.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு 20 ஓவர் ஆட்டங்களில் 2 மற்றும் 5 ரன் வீதம் எடுத்து சொதப்பிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (782 புள்ளி) 2-ல் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திலக் வர்மா (804) 2-வது இடத்துக்கும், இங்கிலாந்தின் பில் சால்ட் ( 791) 3-வது இடத்துக்கும் முன்னேறினர். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 11-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வினில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் 41 பந்தில் சதம் விளாசியதோடு மொத்தம் 125 ரன்கள் திரட்டி சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க 'இளம் புயல்' டிவால்ட் ப்ரீவிஸ் கிடுகிடுவென 80 இடங்கள் எகிறி 614 புள்ளிகளுடன் 21-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் 6 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி, இங்கிலாந்தின் அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹூசைன், இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
    • ஐபிஎல் தொடரில் குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரூ.9¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய அவர் 9 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் அவர் 19-வது ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக சென்னை அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பாக 38 வயதான அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அளித்த விளக்கம் வருமாறு:-

    கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நான் எந்த ஐ.பி.எல். அணியிலும் இருந்தாலும், அந்த அணிக்காக எல்லா ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறேன். குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். அதனால் அணியில் எனது பங்களிப்பு என்ன? என்னை வைத்து உங்களது எதிர்கால திட்டமிடல் என்ன? என்பது குறித்து தெளிவுப்படுத்தும்படி ஐ.பி.எல். தொடரின் போதே அணி நிர்வாகத்திடம் கேட்டு விட்டேன்.

    சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு பரஸ்பர வர்த்தகம் அடிப்படையில் மாற வேண்டும் என்றால் சென்னையிடம் ரூ.18 கோடி கையிருப்பு இருக்க வேண்டும். அதன் பிறகு யாரை விடுவித்தால், அவரை எடுக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். நான் சென்னை அணியில் இருந்து விலகினால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் நான் வெளியேறினால் மட்டும் அது நடந்துவிடும் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வீரர் தனது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு ஆர்வம் உள்ளதா இல்லையா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க உரிமை உள்ளது. அது தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்துமாறு கேட்கலாம். தற்போது நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன். அணியில் எனது நிலை குறித்து தெளிவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

    மற்றபடி எனது கையில் எதுவும் இல்லை. நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகிறோம் என்று கூறவில்லை. இது சில இடங்களில் இருந்து கிளப்பிவிடப்பட்ட வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது. தொடரை வென்ற மகிழ்ச்சி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். வீரர்கள் அனைவரும் சுற்றிருந்த ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் அடித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது

    முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது. 

    • ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

    சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

    • இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சின்னசாமி மைதானம் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×