என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: பெங்களூருவில் நடைபெற இருந்த ஆட்டங்கள் கடவுளின் தேசத்துக்கு மாற்றம்?
- இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சின்னசாமி மைதானம் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






