என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
    • கிறிஸ் கெயில் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

    பார்படாஸ்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார்.

    அவர் 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

    கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.

    மேலும் இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில் 3 கோல்டன் டக் அவுட் ஆகும்.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

    இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணிக்காக கடந்த 20 ஆண்டுகளாக சுனில் சேத்ர்பங்களிப்பு அளித்து வந்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    அவர் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்காக ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் அவரின் சாதனையை பதிவிட்டு ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு கவுரவித்துள்ளது. இந்த தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
    • 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    கயானா:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் இன்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார். உகாண்டா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னில் சுருண்டது.

    அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் , ஜூமா மியாகி, பிராங்க் நசுபுகா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய உகாண்டா அணி 78 ரன் இலக்கை 7 விக்கெட்டை இழந்து தான் எடுத்தது. அந்த அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரியாசத் அலி 33 ரன் எடுத்தார். அலைனோ, நார்மன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    20 ஓவர் உலக கோப்பையில் உகாண்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 125 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    உகாண்டா 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 9-ந் தேதி எதிர்கொள்கிறது.

    பப்புவா நியூகினியாவுக்கு தொடர்ந்து 2-வது தோல்வி ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டில் தோற்று இருந்தது. 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 14-ந் தேதி சந்திக்கிறது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.
    • அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு டல்லாஸ் நகரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.

    கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதான பலமே பந்து வீச்சு தான். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் விலா பகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று கேப்டன் அசாம் தெரிவித்தார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 4,023 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமுக்கு அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை (4,038 ரன்) முந்துவதற்கு 16 ரன் மட்டுமே தேவை.

    இது குறித்து பாபர் அசாமிடம் கேட்ட போது, 'உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கவே இங்கு வந்துள்ளோமே தவிர, எனது தனிப்பட்ட சாதனை மைல்கல் குறித்து சிந்திப்பதற்காக அல்ல. சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அது தான் முக்கியம். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம்' என்றார்.

    அமெரிக்கா

    மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடி விட்டு இடம்பெயர்ந்துள்ள ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், முன்பு தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்காக ஆடிய ஆன்ட்ரியாஸ் கவுஸ், இந்திய வம்சாவளியினர் கேப்டன் மோனக் பட்டேல், ஹர்மீத் சிங், சவுரப் நெட்ராவல்கர், பாகிஸ்தானில் பிறந்தவரான அலிகான் இப்படி பல நாட்டு வீரர்களின் கலவையாக உருவாகியுள்ள அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    கடந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நமிபியா- ஸ்காட்லாந்து அணிகள் ('பி' பிரிவு) சந்திக்கின்றன. நமிபியா தனது முதல் லீக்கில் சூப்பர் ஓவரில் ஓமனை பதம் பார்த்தது. அதே சமயம் ஸ்காட்லாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.

    அந்த ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் ஆவலில் உள்ளது.

    • கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
    • இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.

    இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.

    இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.

    150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    • அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐயர்லாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

     


    அந்த வகையில், சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா, மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் உள்ளனர்.

    மேலும், 4 ஆயிரம் ரன்களை கடக்க குறைந்த பந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியிலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 2 ஆயிரத்து 860 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் பாபர் அசாம் முறையே 2 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 82 பந்துகளை எதிர்கொண்டு இந்த பட்டியிலில் இடம்பிடித்துள்ளனர்.

    இதுதவிர சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து கிரிஸ் கெயில் 553 சிக்சர்களை விளாசி 2-வது இடத்திலும், ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்களை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். நேற்றைய வெற்றியின் மூலம் இவர் 300 போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்திய கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக 42 போட்டிகளில் ரோகித் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் எம்.எஸ். டோனி மற்றும் விராட் கோலி உள்ளனர். இருவரும் முறையே 41 மற்றும் 30 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

    • விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.

    ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவரில் 76 ரன்கள் விளாசியது.

    10 ஒவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

    சுழற்பந்து வீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கிய அடிக்க முயன்ற சூர்யகுமார் கேட்ச் ஆகி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஷிவம் டுபே களம் இறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது.

    13-வது ஓவரின் 2-வது பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரிஷப் பண்ட் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் டுபே ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 4வது சுற்று முடிந்து காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினியுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை 1-6 என இழந்தார். அடுத்த செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 4-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி இத்தாலி வீராங்கனை பாவ்லினி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.

    கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தார்.
    • எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அண்மையில் ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தது உலக அளவில் பேசுபொருளானது.

    இது தொடர்பாக எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த புகைப்படத்திற்கு ரொனால்டோ பதிவிட்ட கமெண்ட், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கமெண்ட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

    அந்த கமெண்டிற்கு 38 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. 

    ×