search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world cup cricket"

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
    • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

    நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

    உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

    மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.
    • உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, அவர்கள் (வெளிநாட்டு நிபுணர்கள்) தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளை பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இந்திய அணியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்களையா தேர்வு செய்கிறோம்? இது எப்படி அவர்களது கவலையாக இருக்கும். இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்கிறார்களா? அது எங்களது வேலை இல்லை.

    கோலி, ரோகித் சர்மாவை விட பாபர் ஆசம் சிறந்தவர் என்று கூறுவார்கள். ஷாகின் ஷா அப்ரிடி சிறந்தவர், தெண்டுல்கரைவிட இன்சமாம்-உல்-ஹக் சிறந்தவர் என்று கூறினார்கள். அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.

    யார் 3-வது மற்றும் 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
    • அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலைப்படாமல் மனதை நெருக்கடியின்றி எப்படி இயல்பாக வைத்துக் கொள்கிறேன் என்பதே முக்கியம். இன்னும் சொல்லப்போனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எத்தகைய மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அப்போது மனதளவில் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். போட்டிக்கும் சிறப்பாக தயாராகி (5 சதம் உள்பட 648 ரன் குவித்தார்) இருந்தேன். அந்த சமயம் என்னவெல்லாம் செய்தேனோ அதனை மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்து, அதன்படி தயாராக முயற்சிக்கிறேன். அதை செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    ஒரு போட்டியின் முடிவு அல்லது ஒரே ஒரு சாம்பியன்ஷிப் என்னை எந்த வகையிலும் மாற்றி விடாது. கடந்த 16 ஆண்டுகளாக எப்படி இருக்கிறேனோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறேன். எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த 2 மாதங்களில் எனது இலக்கை எப்படி நிறைவேற்ற போகிறேன் என்பதில் ஒரு வீரராகவும், அணியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஒன்று அல்லது 2 மாதத்திற்காக ஒரு நபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.

    சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். எது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை தான் நான் சிந்திக்கிறேன். என்னை பொறுத்தவரை சக வீரர்களுடன் இணக்கமான சூழலை கொண்டு வந்து, சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது. அந்த சமயத்தில் நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதே போல் களம் காணும் 11 பேரை இறுதி செய்யும் போதும், வெளியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் நீங்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுவோம்.

    சில நேரங்களில் அவர்களது இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு என்னை தேர்வு செய்யாத போது, மனம் உடைந்து புலம்பி இருக்கிறேன். ஆனால் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் எதிரணி, ஆடுகளம், எங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே அணியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் நமது தேர்வு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிரிசிற்குள் நில்லுங்கள் நிம்மதியாக வாழுங்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    • நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

    பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே" என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

    இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

    சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • உலகக் கோப்பை போட்டி 10 மைதானங்களில் நடக்கிறது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட்டியின் 48 ஆட்டங்களும் அகமதபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 மைதானங்களில் நடக்கிறது.

    உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) குழு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தது.

    இதற்கிடையில் ஐ.சி.சி.யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறது.

    அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.சி.சி. தலைமை ஆடுகள பராமரிப்பாளர் ஆன்டி அட்கின்சன் நேற்று ஆய்வு செய்தார். முழு வீச்சில் தயாராகி வரும் ஆடுகள தன்மை, அவுட் பீல்டு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறும்போது, "மிகப்பெரிய போட்டிக்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான ஆய்வு இதுவாகும். அனைத்து வசதிகளையும், நாடுகள் செய்த பணியையும் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.

    உலகக் கோப்பை போட்டிக்காக ஐ.பி.எல். முடிந்த பிறகு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை.

    உலக கோப்பை போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    நியூசிலாந்து-வங்காளதேசம் (அக்டோபர் 13), நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 18), பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 23), பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (அக்டோபர் 27) போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    • இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா ஷேர் செய்துள்ளார்.
    • ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

    இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

    கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.

    இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
    • 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.

    3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

    • சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள்.
    • உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.

    இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 அரை சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.

    நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
    • உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.

    ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    ×