search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக கோப்பை கிரிக்கெட் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது
    X

    உலக கோப்பை கிரிக்கெட் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
    • உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.

    ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×