search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab Cricket Organization"

    • இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது.
    • மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர்-நவமபர் மாதங்களில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியமும் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) இணைந்து நேற்று வெளியிட்டது.

    50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன.

    முதல் அரைஇறுதி ஆட்டம் நவம்பர் 15-ந் தேதி மும்பையிலும், 2-வது அரை இறுதி போட்டி 16-ந் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது. இறுதிபோட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டி இங்குதான் நடக்கிறது. இதேபோல நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் சென்னையில் தலா 2 ஆட்டங்களில் விளையாடுகிறது.

    உலக கோப்பை போட்டிகள் அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 இடங்களில் நடக்கிறது. இதில் ஐதராபாத் தவிர மற்ற 9 நகரங்களிலும் இந்திய அணி 9 ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது. பகல்-இரவு போட்டி 2 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது. பகல் நேர போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான இடங்கள் தொடர்பாக பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிரபல இடங்களான மொகாலி, இந்தூர், ராஜ்கோட் ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் விடுபட்டுள்ளன.

    பஞ்சாப், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறும்போது, '2011 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய அரை இறுதி மொகாலியில் தான் நடந்தது. 1996 உலக கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றது. தற்போது உலக கோப்பை போட்டிக்கான இடங்களை ஒதுக்காதது அதிருப்தி அளிக்கிறது' என்றார்.

    மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் அபிலாஷ் கண்டேகர் கூறியதாவது:-

    1987-ம் ஆண்டு இந்தியா-நியூசிலாநது அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி இந்தூரில் தான் நடந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் இங்கு சமீபத்தில் நடைபெற்றது.

    தற்போது உலக கோப்பை போட்டியை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு போட்டி ஒதுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் 11 இடங்களில் போட்டிகள் நடந்தது. தற்போது 10 இடங்களில் தான் போட்டிகள் நடக்கிறது. இதை அதிகரித்து இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×